மும்பை: அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதன் எதிரொலியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து பங்குகளை விற்பனை செய்து இந்த மாதத்தில் இதுவரை ரூ.31,430 கோடியை எடுத்துச் சென்றுள்ளனர்.
கரோனா பரவலால் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்குப் பிறகு பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
வட்டி உயர்வு
பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தது. பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பணவீக்க விகிதம் உயர்ந்து வருகிறது.
இதுமட்டுமின்றி சீனாவில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமலாக்கம் செய்யப்படுவதாலும் சப்ளை செயின் பாதிக்கப்பட்டு இதனால் விலைவாசி பெரிய அளவில் உயரும் நிலையும் உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து பங்குகளை விற்பனை செய்து இந்த மாதத்தில் இதுவரை ரூ.31,430 கோடியை எடுத்துச் சென்றுள்ளனர்.
அச்சம்… கலக்கம்…
இதன் மூலம், 2022 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (எஃப்பிஐக்கள்) பங்குகளில் இருந்து வெளியே எடுத்துச் சென்ற ரூபாயின் மதிப்பு ரூ.1.98 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று தரவுகள் காட்டுகிறன. அக்டோபர் 2021 முதல் இந்திய பங்குகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் ஜூன் மாதத்திலும் தொடர்கிறது.
இதுகுறித்து ஜியோஜித் நிறுவனத்தைச் சேர்ந்த பங்குச்சந்தை நிபுணர் வி கே விஜயகுமார் கூறியதாவது:
அமெரிக்காவில் தொடர்ந்து பணவீக்கம் உயர்ந்து வரும் நிலையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது உலகளாவிய முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். உலகளாவிய மந்தநிலையின் அதிகரித்து வரும் அச்சத்துக்கு ஏற்ப எதிர்வினையாற்றுகின்றனர். இதனால் பங்குச்சந்தைகளும் கலக்கத்தில் உள்ளன.
அமெரிக்காவில் டாலரை வலுப்படுத்துவதும், பத்திர வருவாயில் அதிகரிப்பதும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணமாகும். அமெரிக்க மத்திய வங்கி, பாங்க் ஆஃப் இங்கிலாந்து, சுவிஸ் மத்திய வங்கி போன்ற மத்திய வங்கிகள் விகிதங்களை உயர்த்தியதால் உலகளவில் வட்டி விகிதங்கள் உயர்ந்து வருகின்றன. இதனால் பணம் ஈக்விட்டியில் இருந்து பத்திரங்களுக்கு நகர்கிறது” கூறினார்.