மத்திய அரசு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டி வருகிறது. ஏற்கெனவே இருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு எதிர்புறம் இருந்த சில கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் நாடாளுமன்றம் ஆங்கிலேயர்களால் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி, பிரதமருக்கான இல்லம், நாடாளுமன்றக் கட்டடம் கட்டும்பணி கடந்த 2019-ம் ஆண்டு 13,450 கோடி செலவில் தொடங்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணி வரும் அக்டோபர் மாதம் முடியும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் குளிர் காலக்கூட்டத்தொடரை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் இந்தியா தன்னிறைவு பெற்றதை காட்டும் விதமாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தைவிட புதிய நாடாளுமன்றக் கட்டடம் சிறப்பானது. பழைய கட்டடமும் ஒரு அங்கமாக இருக்கும். அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு நாடாளுமன்றம் அதிக நேரம் செயல்படுகிறது.
இரவு வரைகூட நாடாளுமன்றம் நடைபெறுகிறது. அவையை எந்த வித பிரச்னையும் இன்றி நடத்த நான் அடிக்கடி அரசியல் கட்சிகளின் தலைவர்களோடு பேசுகிறேன். அரசியல் கட்சிகளும் தங்களது கட்சிகளின் நாடாளுமன்றத் தலைவர்களோடு பேசவேண்டும்” என்று தெரிவித்தார்.
புதிதாக கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயர் வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் தேவையில்லாமல் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.