ஐ.நா சபையில் `வெறுப்புப் பேச்சுகளை எதிர்ப்பதற்கான சர்வதேச தின’த்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐ.நா சபையின் இனப்படுகொலை தடுப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பொறுப்பு குழுவால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய ஐ.நா சபைக்கான பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, “பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். எனவே, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் மதவெறியில் இரட்டை நிலைப்பாடு இருக்க முடியாது.
அதனால் நாங்கள் வலியுறுத்தியபடி, மதவெறியை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர… இரண்டு மதங்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதலை மட்டுமே எதிர்க்கும் ஒரு கொள்கையை வைத்திருக்கக் கூடாது. அதனால், ஆபிரகாமியல்லாத மதங்களுக்கு எதிரான ஃபோபியாக்களுக்கும் இதே கொள்கை சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதைச் செய்யும் வரை, இதுபோன்ற சர்வதேச வெறுப்பு ஒழிப்பு நாள்கள் ஒருபோதும் அதன் நோக்கங்களை அடையாது.
இந்தியாவின் பன்முக கலாசாரத்தால் பல நூற்றாண்டுகளாக… யூத சமூகம், ஜோராஸ்ட்ரியர்கள் அல்லது திபெத்தியர்கள் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து தஞ்சமடையும் அனைவருக்கும் இந்தியா பாதுகாப்பான புகலிடமாக இருக்கிறது. அதனால்தான், தற்போது இந்தியாவில் பயங்கரவாதம் அதிகரித்திருக்கிறது.
இந்த வரலாற்று உணர்வோடுதான் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்தியா தொடர்ந்து திட்டங்களை வரையறுத்துவருகிறது. விரோதங்கள் எங்கள் சட்ட கட்டமைப்பிற்குள் கையாளப்படுகின்றன. அதனால் வெளியாட்களிடமிருந்து எங்கள் நாட்டின் மீதான சீற்றம் எங்களுக்குத் தேவையில்லை.
வன்முறை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் கல்விக்கு முக்கிய பங்கு உண்டு. பன்மைத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உண்மையிலேயே பங்களிக்கும் கல்வி முறையை உருவாக்குமாறு இந்த சபையின் உறுப்பு நாடுகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
ஒவ்வொரு மதமும் பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம். சகோதரத்துவ ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவம் ஆகிய இரண்டு கொள்கைகளையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, சகிப்பின்மை அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய அனைத்து நாடுகளும் இந்த கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம்.” எனக் கூறினார்.