ஜப்பானில் இருந்து 2014-ம் ஆண்டு Hayabusa2 என்கிற விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. C-Type விண்கல் ஒன்றை ஆய்வு செய்த இந்த விண்கலம் அங்கிருந்து எடுத்தனுப்பிய மாதிரிகள் டிசம்பர் 2020-ல் பூமிக்கு வந்து சேர்ந்தன. இந்த மாதிரிகளைப் பெறுவதற்கு இன்றைக்கு உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் போட்டிப் போட்டு கொண்டிருக்கின்றனர்.
அந்த விண்கல்லின் மாதிரிகளில் 20 அமினோ ஆசிட்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இந்த அமினோ ஆசிட்கள் என்கிற மூலக்கூறு உயிர் வளர்ச்சிக்கு உதவும் ப்ரோட்டின்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. உணவு செரிக்க, உயிர் வளர, உடலின் திசுக்கள் குணமாக என இப்படிப் பல செயல்களுக்கு ஆதாரமாக அமையக் கூடிய இந்த மூலக்கூறுகள் உடலின் எரிசக்தியாகவும் பயன்படும்.
இதற்கு முன்பு பூமியில் விழுந்த விண்கல்லிலிருந்து இது போன்ற அமினோ ஆசிட்கள் கண்டறியப்பட்டு இருந்தாலும் அவை மிகக்குறைவாகவே கிடைத்திருக்கின்றன. பூமியின் வளிமண்டலத்தில் விண்கற்கள் நுழையும் போது அவை எரிந்துவிடுவதால் மூலக்கூறுகளைப் பெருமளவில் இழந்துவிட்டே மண்ணில் விழுகின்றன.
இதில் இருக்கும் உயிர் வாழும் கூறுகள் சூரியக்குடும்பத்தின் தோற்றத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யப் பயன்படும். ஆய்வு செய்த விண்கல்லுக்கு Ryugu என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த விண்கல் சூரியனைச் சுற்றும் பாதையில், செவ்வாய்க்கு அருகில் பூமியிலிருந்து 300 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இது 4.6 பில்லியன் வருடத்திற்கு முன்பானதாக இருக்கலாம் என்கிறார்கள்.
பூமி தோன்றுவதற்கு முன்பாக உருவாகியிருக்கும் துகள்கள் என்பதால் இவற்றைப் பூமியில் காண முடியாது. இந்த ஆய்வை ஜப்பானின் விண்வெளி மையமும் NASA-வும் இணைந்து மேற்கொள்கின்றன.
இந்த மாதிரித் துகள்களை ஆய்வுக்காகப் பெற ஆராய்ச்சி குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கேட்கப்பட்டன. 12 நாடுகளிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 40 மட்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. ஆராய்ச்சியில் பிரபஞ்ச ரகசியங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள் விஞ்ஞானிகள்.