OPS shock: Theni district ADMK executives met EPS: ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளது, பன்னீர்செல்வம் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர் தனித்தனியாக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் தங்களது ஆதரவாளர்களையும் அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: எல்.முருகனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்; கோவை விமான நிலையத்தில் பரபரப்பு
இதில் 90% நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை முதல் பல்வேறு அ.தி.மு.க நிர்வாகிகள் ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம். ஓ.பி.எஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இருதரப்பினரையும் சமாதானம் செய்யவும் சில மூத்த நிர்வாகிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியது, ஓ.பி.எஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ஐக்கையன், ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கே என்று கூறினார். மேலும் தேனி மாவட்ட நிர்வாகிகள் இ.பி.எஸ்-ஐ தலைமை ஏற்க வலியுறுத்தி உள்ளோம் என்றும் கூறினார்.
ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சொந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவு இல்லாதது, அரசியல் வட்டாரத்தில் ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.