அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற முடியாது: ராணுவ அதிகாரி திட்டவட்டம்!

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று, ராணுவ விவகாரத் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, அக்னிபத் என்ற ராணுவத்தில் சேரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில், ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 4 ஆண்டுகள் பயிற்சி முடிந்த பிறகு, 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவர். 75 சதவீத இளைஞர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.

4 ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரம் ஆக்கப்படுவதால் மற்ற இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடும் என, கூறப்படுகிறது. இதனால் இந்தத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில் இன்று, ராணுவ விவகாரத் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை. அக்னிபத் மூலம் சேருபவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ராணுவத்தில் சேர ஒழுக்கம் மிக அவசியம். தீ வைப்பு போன்ற நாசவேலைகளில் ஈடுபடுவோருக்கு இடமில்லை.

வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் ராணுவத்தில் சேர முடியாது. ஒவ்வொரு விண்ணப்பமும் காவல் துறை மூலம் சரிபார்க்கப்படும். நாசவேலைகளில் ஏதும் ஈடுபடவில்லை என காவல் துறை சான்று பெற்றுத் தந்தால் தான் ராணுவத்தில் சேர முடியும்.

அக்னிபத் திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் முப்படையில் சேர வாய்ப்பு உள்ளது. பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் பரிந்துரைகளின் அடிப்படையில் அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. முப்படைகளில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவே அக்னிபத் திட்டம். அக்னி வீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். அக்னி வீரர்கள் உயிர் தியாகம் செய்தால் 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, அக்னிபத் திட்டம் தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.