"உங்கள் மகனாக இருந்தால் என்ன செய்வீர்கள்?" அக்னிபாத் போராட்டத்தின் போது நெகிழ்ச்சி சம்பவம்

ஹரியாணாவில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியருக்கும், இளைஞர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் இளைஞர்களை பணிக்கு அமர்த்தும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. வன்முறைப் போராட்டங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அமைதி வழியிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ஹரியாணா மாநிலம் பானிபட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்ற மாவட்ட ஆட்சியர் கமல் கிரிதர், அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து, அவரிடம் அங்கிருந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
image
அந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் எழுந்து, “போராட்டத்தில் ஈடுபடுவோரில் ஒருவர் உங்கள் மகனாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அவரிடமும் இப்படிதான் சொல்வீர்களா? ” எனக் கேட்டார். அவர் கூறியதை கேட்டதும் கண்கலங்கிய ஆட்சியர் கமல் கிரிதர், அந்த இளைஞரை கட்டியணைத்துக் கொண்டார். பின்னர் அவரிடம், “உன் தந்தை வயதுதான் எனக்கு இருக்கும். இப்படி போராட்டம் நடத்துவதால் உனது எதிர்காலம் பாதிக்கப்படும். இங்கிருந்து கலைந்து செல்லுங்கள். உங்கள் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் தெரிவிக்கிறேன். அரசாங்கம் நல்ல முடிவை எடுக்கும்” எனக் கூறினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#Watch | At Haryana ‘Agnipath’ Demonstration, An Emotional Moment Between Protester, Official pic.twitter.com/OdWJMbgYfL
— NDTV (@ndtv) June 19, 2022

இதேபோல, மற்றொரு இளைஞர் ஒருவர் கூறுகையில், “நான் 12-ம் வகுப்பு படித்திருக்கிறேன். 9 ஆண்டுகளாக ராணுவத்தில் சேருவதற்கான தேர்வுக்கு பயிற்சி எடுத்து வருகிறேன். எனக்கு இப்போது 22 வயது ஆகிறது. தற்போது அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்தால் 26 வயதில்தான் வெளி வருவேன். பின்னர் பட்டப்படிப்பு முடிக்க 29 வயது ஆகிவிடும். 30 வயதான பிறகு எனக்கு யார் வேலை கொடுப்பார்கள்?” எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல் கிரிதர், “அரசாங்கம் இதற்கு நல்ல தீர்வை காணும்” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.