“நீண்டகால திட்டமிடல் இது; போராட்டக்காரர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை!" – ஜெனரல் அனில் பூரி

பாதுகாப்புப் படைக்குப் `அக்னிபத்’ என்ற பெயரில் புதிய ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆரம்பத்தில் பீகாரில் தொடங்கிய போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவியிருக்கிறது. ஏராளமான ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விமானப்படை தளபதி வி.ஆர்.செளதரி இது தொடர்பாக நேற்று அளித்த பேட்டியில், “அக்னிபத் திட்டத்துக்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்புத்துறையில் வேலைக்குச் சேர வேண்டும் என்று தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருப்பவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றால் கடுமையான விலை கொடுக்கவேண்டி வரும்.

அக்னிபத் போராட்டம்

இந்த வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. இது பிரச்னைக்குத் தீர்வாகாது. பாதுகாப்புப்படையில் வேலைக்குச் சேர நினைப்பவர்கள் இறுதியில் போலீஸில் சரிபார்ப்பு சான்றிதழ் வாங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டால் அந்தச் சான்றிதழ் கிடைக்காது. அக்னிபத் திட்டம் மிகவும் சிறப்பான திட்டம். இதில் சந்தேகம் இருப்பவர்கள் அருகில் உள்ள ராணுவம், கடற்படை, விமானப்படை முகாம்களுக்குச் சென்றால் சந்தேகத்தைத் தீர்த்துவைப்பார்கள்.

இந்தத் திட்டம் குறித்து சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். அதோடு முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் திட்டத்தில் உள்ள நன்மைகள், பலன்களையும் பார்க்க வேண்டும். இந்தத் திட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. திட்டத்தை முழுமையாக அமல்படுத்திய பிறகு, அதில் தேவைப்பட்டால் திருத்தம் கொண்டு வரப்படும். வரும் 24-ம் தேதி விமானப்படைக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம்

அதைத் தொடர்ந்து இன்று ராணுவ விவகாரத் துறையின் கூடுதல் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தியாவின் படைகளை எப்படி இளமையாக மாற்றுவது என்பது குறித்து நாங்கள் நீண்ட காலமாக ஆலோசித்து வந்தோம். எங்களுக்கு இளைஞர்கள் தேவை. அவர்கள்தான் ரிஸ்க் எடுப்பவர்கள். அவர்கள் பேரார்வம் கொண்டவர்கள். அதனால் முப்படைகளில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பதற்காகவே `அக்னிபத்’ திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. (அக்னிபத்) அக்னிவீரின் கீழ் பணியமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 1.25 லட்சமாக உயரும் என்றார். அடுத்த 4-5 ஆண்டுகளில் ஆள்சேர்ப்பு என்பது 50,00-60,000 ஆக அதிகரிக்கும். இந்தத் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. ராணுவ வீரர்களின் சராசரி வயதைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தில் இணைந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் அக்னி வீரர்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும்.

ராணுவ விவகாரத் துறையின் கூடுதல் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி

இன்று, அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் 30 வயதில் உள்ளனர், அதனால் அதிகாரிகள் கடந்த காலத்தை விட மிகவும் தாமதமாகவே கட்டளையைப் பெறுகிறார்கள்.

எனவே, வெவ்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் அறிவிக்கப்பட்ட ‘அக்னிவீரர்’களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை, அக்னிபாத் திட்ட அறிவிப்புக்குப் பிறகு நடந்த தீக்குளிப்புக்கு எதிர்வினையாக அல்ல. இந்த அக்னி வீரர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன், தேசத்தின் பலமாக இருப்பார்கள். அவர்களின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ராணுவத்தில் ஒருபோதும் இடமளிக்கப்படாது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.