கொழும்பு,-‘யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு, அடுத்த மாதம் முதல் மீண்டும் விமான சேவை துவக்கப்படும்’ என, இலங்கை அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இலங்கைக்கு சுற்றுலா வழியாகவே, அதிக வருமானம் வந்தது. கொரோனா பரவல் காரணமாக, இலங்கையில் சுற்றுலாப் பயணியர் வரத்து குறைந்தது. நாட்டின் கடும் பொருளாதார நெருக்கடிக்கு, இது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, இங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம், ௨௦௧௯ல் இந்திய நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இலங்கை விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா நேற்று கூறியதாவது:இலங்கையில், சுற்றுலாப் பயணியர் வருகையை அதிகரித்து, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, இந்தியாவுக்கு அடுத்த மாதம் மீண்டும் விமான சேவையை துவக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில், ௭௫ இருக்கைகள் உள்ள விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும் என்ற நிலை உள்ளது.எனவே, ஓடுபாதையை விரிவுபடுத்த, இந்தியா உதவி செய்ய வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள், இலங்கைக்கு எட்டு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணியரை வரவழைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement