கொரோனா சிகிச்சை பெறுவோரின் விவரங்களை தனியார் மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும்.! சென்னை மாநகராட்சி ஆணையர்.!

தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை தனியார் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 94 என்ற நிலையில் இருந்த கொரோனா தொற்று 250 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் நெறிமுறைகளின்படி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, மற்றும் இருமல் போன்ற கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும், வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம் கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள் சிகிச்சை பெறுவதாகவும், அதுகுறித்த தகவல்கள் மாநகராட்சியின் கவனத்திற்கு வருவதில்லை என தெரிய வருகிறது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கோவிட் தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களை நாள்தோறும் கீழ்க்காணும் அட்டவணைகளின்படி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கோவிட் தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த விவர அட்டவணை வ.எண். பெயர், முகவரி கைபேசி எண் அறிகுறிகள்.

கோவிட் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவர அட்டவணை வ.எண். பெயர், முகவரி, கைபேசி எண் கோவிட் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நாள், மருத்துவமனை பெயர் மற்றும் முகவரி வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்ட நாள்.

தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் காய்ச்சல், சளி, மற்றும் இருமல் போன்ற கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்களின் விவரங்களையும், தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க தவறினால் தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939 (Tamilnadu Public Health Act) மற்றும் சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேசன் சட்டம் 1919 (CCMC Act 1919) ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.