காபூல்-ஆப்கனில் உள்ள குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அந்நாட்டில் வசிக்கும், 100க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியா வர, மத்திய அரசு ‘விசா’ வழங்கி உள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில், சீக்கியர்களின் வழிபாட்டு தலமான, ‘கர்தே பர்வன்’ குருத்வாரா உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் காலை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதைத்தொடர்ந்து, விரைந்து வந்த தலிபான் ராணுவத்தினரை நோக்கி, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கி சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குண்டுவெடிப்பில், சீக்கியர் ஒருவர் உட்பட இரண்டு பேர் இறந்தனர். ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, அங்குள்ள சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் 111 பேருக்கு, மத்திய அரசு மின்னணு முறையில் விசா வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அவர்களை மீட்டு, இந்தியா அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, சீக்கிய அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement