திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் கடந்த 1070 ஆம் ஆண்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலி ஆகிய மூன்று விவசாயிகளுக்குஇன்று தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
இதில் திமுகவின் கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நிறுவனர் ஈஸ்வரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது,
“தமிழக அரசியலில் அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட வேண்டுமென்றால், அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை என்பது அவசியமான ஒன்றாகும். அதுதான் நல்ல தீர்வாகவும் அமையும்.
தற்போது உள்ள இரட்டை தலைமை காரணமாக, இந்த பக்கம் நூறு பேரும், அந்த பக்கம் 100 பேரும் என்று மாற்றி மாற்றி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.
கட்சிக்கு வேண்டுமானால் இரட்டை தலைமை இருந்து கொள்ளலாம். ஆனால் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் போது ஒற்றை தலைமையிலிருந்து குரல் கொடுத்தால் தான், எதிர்க்கட்சியாக செயல்பட முடியும். எனவே அதிமுகவுக்கு ஒற்றை தலைமை ஏற்பது நிரந்தர தீர்வாக அமையும்” என்று இந்த செய்தியாளர் சந்திப்பில் ஈஸ்வரன் தெரிவித்தார்.