புது டெல்லி: மத்திய அரசின் நல்ல திட்டங்களை அரசியலாக்குவது துரதிஷ்டவசமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முப்படைகளில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராகபல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில் டெல்லியில் ரூ.920 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருவதை பிரதமர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.
போராட்டம் குறித்து நேரடியாககுறிப்பிடாமல் “நல்லெண்ணத்துடன் பல்வேறு நல்ல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆனால் அந்த திட்டங்கள் அரசியல் ஆக்கப்படுகின்றன. இது மிகவும் துரதிஷ்டவசமானது” என்று பிரதமர் தெரிவித்தார்.
விழாவில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது. போக்குவரத்து நெரிசல், கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி மக்களுக்கு மத்திய அரசின் பரிசு ஆகும்.
புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. டெல்லியை நவீனமயமாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் காலத்தில் சர்வதேச அளவில் டெல்லியின் உள்கட்டமைப்பு பேசப்படும்.
கடந்த 8 ஆண்டுகளில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 193 கி.மீ.நீளம் கொண்ட மெட்ரோ ரயில்,400 கி.மீ. ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. டெல்லியின் கிழக்கு, மேற்கு சுற்றுவட்ட எக்ஸ்பிரஸ் சாலை, டெல்லி – மீரட் எக்ஸ்பிரஸ் சாலை ஆகியவை டெல்லியின் போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ளன.
பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். அடுத்த 25 ஆண்டுகளில் பெருநகரங்கள், 2-ம், 3-ம் நிலை நகரங்கள் மேம்படுத்தப்படும். அதேநேரம் நகரங்களின் சுற்றுச்சூழலையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதற்காக நகரங்களில் சிஎன்ஜி வாகனங்கள், மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
1.6 கி.மீ. சுரங்கப் பாதை: பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தில் டெல்லி பிரகதி மின் நிலையத்தில் இருந்து தேசிய விளையாட்டு விடுதி வரை 1.6 கி.மீ. தொலைவுக்கு 6 வழி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிழக்கு டெல்லி, காஜியாபாத், நொய்டா மக்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. புதிய சுரங்கப் பாதையால் அப்பகுதியில் 30 நிமிட பயணம், 5 நிமிடமாக குறையும். எரிபொருள் மிச்சமாகும் என்று டெல்லி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.