வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாளை நாடு முழுதும், 75 முக்கிய நகரங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் முயற்சிக்குப் பின், ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை, 2015ல் அறிவித்தது. அப்போது முதல், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டின் 75வது சுதந்திர தினம், இந்தாண்டு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி நாடு முழுதும், 75 நகரங்களில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிகளுக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்கிறார்.அப்போது, இதற்கு முந்தைய யோகா தினங்களில் நடந்த சிறப்பம்சங்களின் தொகுப்பு, ‘வீடியோ’ வெளியிடப்படுகிறது. இதுபோல் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில், மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். ‘மனிதகுலத்துக்கான யோகா’ என்பது, இந்தாண்டுக்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள். கொரோனா காலத்தின்போது ஏற்பட்ட துயரங்களை தணிப்பதில், யோகா எவ்வாறு மனிதகுலத்துக்கு சேவை செய்தது என்பதை விளக்கும் வகையில், இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
யோகா தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:தொற்றா நோய்களும், வாழ்க்கை முறை சிக்கல்களால் ஏற்படும் உடல்நல சீர்கேடுகளும், இளம் வயதினரிடம் பெருகி வரும் சூழலில், யோகா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சிறந்த ஆரோக்கியத்திற்கும், நலனுக்கும் யோகா பயிற்சி செய்யுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆர்வம்
சர்வதேச யோகா தினத்தையொட்டி, அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகம் சார்பில், வாஷிங்டனில் சிறப்பு யோகா பயிற்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், அமெரிக்க அதிகாரிகள், செனட் உறுப்பினர்கள், தொழில் துறையினர், இந்திய வம்சாவளியினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அமெரிக்காவின் தேசிய அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் சேதுராமன் பஞ்சநாதன் கவுரவ விருந்தினராக பங்கேற்றார். அவர் கூறுகையில், ”சர்வதேச நாடுகளுக்கு இந்தியா அளித்த பரிசு தான் யோகா,” என்றார்.
Advertisement