புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் பணி நிமித்தமாக விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், குறைவான கட்டணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
அரசு அதிகாரிகள் அரசுமுறை பயணமாக விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், பால்மர் லாரிஅன்ட் கோ, அசோக் டிராவல் அன்ட் டூர்ஸ் மற்றும் ஐஆர்சிடிசி ஆகிய 3 பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் மட்டுமே டிக்கெட் வாங்க வேண்டும். இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட துறைகள் செலுத்தும்.
இது தொடர்பான விதிமுறையில் மத்திய நிதியமைச்சகத்தின் செலவின துறை சில மாற்றங்களை செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது. மத்திய அரசு ஊழியர்கள் அரசு முறை பயணமாக விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், தங்களின் பயணத்துக்கு அங்கீகரிக் கப்பட்ட வகுப்பில் குறைவான கட்டணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலும் பயண நாளுக்கு 21 நாள் முன்பே விமான டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் கட்டணம் குறைவாக இருக்கும். இதனால் அரசுக்கு செலவு மிச்சமாகும். பயண நேரத்திலிருந்து 72 மணி நேரத்துக்கு கீழாக டிக்கெட் முன்பதிவு செய்தாலோ, 24 மணி நேரத்துக்கு குறைவான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தாலோ, சம்பந்தப்பட்ட அதிகாரி சுயவிளக்கம் அளிக்க வேண்டும். அதிகாரிகள் குழுவாக பயணிக்க வேண்டியிருந்தால், அனைவருக்கும் ஒரே பயண ஏற்பாட்டாளரிடம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கு சேவை கட்டணம் எதுவும் வழங்கக் கூடாது.
அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த 72 மணி நேரத்துக்குள் அது தொடர்பான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பயணம் முடிந்த 30 நாட்களுக்குள் பயண ஏற்பாட்டாளர்களுக்கு உரிய தொகையை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் வழங்கவேண்டும். பயண ஏற்பாட்டாளர் களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ஏதேனும் இருந்தால் அதை வரும் ஆகஸ்ட் 31-க்குள் வழங்க வேண்டும்.
செலவைக் குறைக்க: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைப்பு, சில பொருட்களுக்கான சுங்க வரிகுறைப்பு, ஏழைகளுக்கு இலவசஉணவுப்பொருள் உள்ளிட்டவற்றால் அரசின் செலவு அதிகரித் துள்ளது. எனவே, தேவையற்ற செலவைக் குறைக்கவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. -பிடிஐ