வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்யாமல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் சென்னை வாசிகள் பெரும் அவதியடைந்தனர். பகல் மற்றும் இரவில் அனல்காற்று வீசியதால் தூக்கமும் இன்றி தவித்தனர்.
ஆனால், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், நெல்லை, மதுரை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ததால் அப்பகுதி மக்களை பார்த்து, சென்னை வாசிகள் பொறாமை அடைந்தனர் என்றே கூறலாம்.
இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்றிரவு மழை பெய்தது. பின்னர் சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டியது. பின்னர் மழை குறைந்தாலும் ஓயவில்லை. விடிய விடிய மழை பெய்ததால் சென்னை குளிர்ந்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாராங்களில் மழை பெய்தது. அண்ணாநகர், எழும்பூர், சென் ட்ரல், அசோக்நகர் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர்,சூளைமேடு, புரசைவாக்கம், வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
சென்னையின் புறநகர் பகுதிகளான கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், அனகாபுத்தூர், பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
newstm.in