பலாப் பழத்துடன் குளிர் பானம்; சிறுவன் பலி| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

ஜம்மு – காஷ்மீரில்2 பயங்கரவாதிகள்சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்-ஜம்மு – காஷ்மீரில் நடந்த ‘என்கவுன்டரில்’ இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு – காஷ்மீரில் உள்ள, குப்வாராவில் சவுகத் அகமது ஷேக் என்ற பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் குப்ராவா மாவட்டத்தின், லோலப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி என தெரிய வந்தது.

இளம்பெண் பலாத்காரம்15 வயது சிறுவன் கைது

டேராடூன்-உத்தரகண்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கழிப்பறையில் வைத்து, 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், 15 வயது சிறுவன், தன் பெற்றோருடன் தங்கியிருந்தான். நேற்று முன்தினம் அந்த சிறுவன், ஹோட்டலில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குச் சென்றான். அந்த அறையை உட்புறமாக தாழிட்ட அந்த சிறுவன், அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த, 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தான்.

அந்த பெண், உதவிக் குரல் எழுப்பியும், கழிப்பறை பூட்டப்பட்டிருந்ததால், குரல் வெளியில் கேட்கவில்லை. தன் வெறியை தீர்த்துக் கொண்ட அந்த சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடினான். பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்தார். அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்ட அந்த சிறுவன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

வெளிநாட்டினரிடம் பண மோசடி; புதுடில்லியில் ஈரான் நபர் கைது

புதுடில்லி-உளவுத்துறை ஏஜன்ட் எனக் கூறி, வெளிநாட்டினரிடம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த ஈரான் நபரை போலீசார் கைது செய்தனர்.

அவரது கூட்டாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.மேற்காசிய நாடான ஈரானைச் சேர்ந்தவர் உசேன் அகமது, ௪௬. கடந்த மாதம் ௨௧ல், மருத்துவ ‘விசா’வில் டில்லிக்கு வந்த இவர், இங்கு லஜ்பத் நகரில் தங்கியிருந்தார். இந்நிலையில், லஜ்பத் நகர் போலீசில், சூடான் நாட்டை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது:நானும், என் மனைவியும், மருத்துவ சிகிச்சைக்காக சூடானிலிருந்து டில்லி வந்துஉள்ளோம்.

கடந்த ௧௬ல், கிரேட்டர் கைலாஷில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, நானும், என் மனைவியும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் ஒரு கார் எங்களை மறித்தது. அதிலிருந்து இறங்கிய மூவர், தங்களை உளவுத்துறை ஏஜன்ட்டுகள் எனக் கூறினர். என்னிடம் இருந்த சூட்கேசை வாங்கி அவர்கள் சோதனை செய்தனர். பின், அதை என்னிடம் கொடுத்துவிட்டு, காரில் ஏறி வேகமாக சென்று விட்டனர்.

சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் நான் வைத்திருந்த ௫௦ ஆயிரம் ரூபாய் ரொக்கம், ௫ லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், சூடான் நாட்டு பணம் ஆகியவற்றை காணாமல் அதிர்ச்சியடைந்தேன். வந்தவர்கள் போலி நபர்கள் என தெரிந்தது. அவர்களை பிடித்து, என் பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.இது பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து, கொள்ளையர்கள் வந்த காரின் பதிவு எண்ணை கண்டறிந்தனர்.அதை வைத்து அந்த கார், நவாப் என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்தனர். நவாப் மொபைல் எண்ணை வைத்து அவரை போலீசார் தேடிய போது, அவரது உதவியாளராக இருந்த, ஈரான் நாட்டை சேர்ந்த உசேன் அகமது சிக்கினார். அவரிடம் விசாரித்த போது, நவாப் மற்றும் வேறு ஒருவருடன் சேர்ந்து, கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.

கடந்த ஒரு மாதத்தில், டில்லியில் பல வெளிநாட்டினரிடம் உளவுத்துறை ஏஜன்ட் எனக் கூறி சோதனை செய்து, வெளிநாட்டு பணத்தை கொள்ளை அடித்ததையும் அவர் ஒப்புக் கொண்டார். அகமதுவை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

தமிழக நிகழ்வுகள்

பலாப்பழத்துடன் குளிர்பானம்: சிறுவன் பலி

புவனகிரி-புவனகிரி அருகே, உணவு ஒவ்வாமையால் சிகிச்சை பெற்று வந்த, 6 வயது சிறுவன் இறந்தார். தாய், மகள் சிகிச்சை பெறுகின்றனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே கஸ்பா ஆலம்பாடி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி பரணி, 26. இவர்களின் மகள் இனியா, 8; மகன் பரணிதரன், 6.மூவரும், கடந்த 18ம் தேதி மாலை வீட்டில் உணவுடன், பலா சுளை சாப்பிட்டு, குளிர்பானம் அருந்தியுள்ளனர்.சற்று நேரத்தில் மூவரும் வாந்தி எடுத்து மயங்கியதால், புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரணிதரன் நேற்று அதிகாலை இறந்தார். பரணி, இனியா சிகிச்சை பெறுகின்றனர். மருதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

latest tamil news

நெல் குவியல் மீது கார் மோதி ஒருவர் பலி: 6 பேர் காயம்

தஞ்சாவூர்-தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம் – வல்லம் சாலையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், போதிய இடவசதி இல்லாததால், அறுவடை செய்த நெல்லை, விவசாயிகள் குவியலாக சாலையோரம் குவித்து வைத்து, தார் பாய் போட்டு மூடியிருந்தனர்.

நேற்று அதிகாலை, வெளிநாடு செல்லும் வடசேரி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், 35, என்பவரை வழி அனுப்புவதற்காக, உறவினர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றனர்.அன்பரசன், 45, ஓட்டிய காரில், சிறுவன் உட்பட ஏழு பேர் பயணம் செய்தனர். அப்போது, சாலையில் இருந்த நெல் குவியல் மீது கார் மோதி கவிழ்ந்தது.விபத்தில், மதுக்கூர் அருகே, நெம்மேலியை சேர்ந்த திருமூர்த்தி, 58, சம்பவ இடத்திலேயே இறந்தார். லேசான காயமடைந்த ஆறு பேர் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.வல்லம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிணற்றில் மூழ்கி 2 பேர் பலி

அரக்கோணம்,-அரக்கோணம் அருகே, குளிக்கும் போது கிணற்றில் மூழ்கி இருவர் பலியாகினர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரில், முனுசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே, இரண்டு பேர் உடைகள் நீண்ட நேரமாக இருப்பதை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அரக்கோணம் தீயணைப்பு துறையினர், இரண்டு மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து இரண்டு பேரின் சடலத்தை மீட்டனர்.விசாரணையில், அவர்கள், சென்னை, மாதவரத்தை சேர்ந்த ரோஷன், 28, பெரம்பூரைச் சேர்ந்த யுவராஜ், 38, என்பதும், குளிக்கும் போது தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.

ரயிலில் இருந்து விழுந்த பிலிப்பைன்ஸ் பெண் பலி

காடையாம்பட்டி-ரயிலில் இருந்து தவறி விழுந்த, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் பலியானார்.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஹாரில், 38. இவரது மனைவி ரிச்சல், 35. இவர்கள், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்தனர்.பெங்களூரில் இருந்து புறப்பட்ட எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, இருவரும் நேற்று காலை, கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.அந்த ரயில், சேலம் மாவட்டம், காருவள்ளி அடுத்த பெரும்பள்ளம் பகுதியில் வந்தபோது, ரயிலில் இருந்து ரிச்சல் தவறி விழுந்து இறந்தார்.தீவட்டிப்பட்டி போலீசார், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

வாகன விபத்து; ஒருவர் பலி

கூடலுார்:கூடலுார் செம்பாலா அருகே, லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.கூடலுார் இரும்புபாலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 21. இவர், தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று கூடலுார் சென்று விட்டு, காலை, 11:00 மணிக்கு இருசக்கர வாகனத்தில், இரும்புபாலம் நோக்கி வந்த போது, எதிரே வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனால், கூடலுார்- கேரளா இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

பறை இசை கலைஞர் அடித்து கொலை; எருது விடும் விழா பகையால் விபரீதம்

ஓசூர்,-கெலமங்கலம் அருகே, எருது விடும் விழாவில் ஏற்பட்ட முன்பகையால், பறை இசை கலைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே தொட்டபேளூரைச் சேர்ந்தவர் லகுமப்பா, 42; பறை இசை கலைஞர்.சில மாதங்களுக்கு முன், பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த எருது விடும் விழாவில் அவருக்கும், அவரது அண்ணன் முனிராஜ், 45, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.எருது விடும் விழாவில், தன் மாடு சரியாக ஓடாததற்கு, அண்ணன் முனிராஜ் மாட்டிற்கு செய்வினை செய்தது தான் என, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.

முனிராஜிற்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த, மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த தேவராஜ், 28, விஜய், 26, அவரது தம்பி சதீஷ், 22, ஆகியோர் லகுமப்பாவிடம் தகராறு செய்ததால், அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு லகுமப்பா, ‘பல்சர்’ பைக்கில் வீடு திரும்பினார். அங்கு நின்றிருந்த தேவராஜ், சதீஷ், விஜய் ஆகியோர், லகுமப்பாவை ஜாதி பெயரை கூறி திட்டினர்.மேலும், தேவராஜ், கத்தியால், லகுமப்பாவின் கால் பகுதியில் குத்தினார். சதீஷ் மற்றும் விஜய் கட்டையால் தாக்கியதில் லகுமப்பா மயக்கமடைந்தார்.

பின் மூவரும் தப்பினர்.லகுமப்பாவை மீட்ட அவரது உறவினர்கள், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ‍கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.கெலமங்கலம் போலீசார் கொலை மற்றும் எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிந்தனர். டி.எஸ்.பி., கிருத்திகா தலைமையில் தனிப்படை அமைத்து, தேவராஜ், சதீஷ், விஜய் ஆகிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்

மாயமானவர் கடத்தி கொலை: போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது

கும்மிடிப்பூண்டி:மாயமானவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ்காரர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 26. கும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்தபடி, தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.கடந்த மே மாதம், 28ம் தேதி முதல் காணவில்லை என, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, தலவாய்புரம் பகுதியில் உள்ள ஏரியில், அழுகிய நிலையில், மாரிமுத்துவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.கொலையில் தொடர்புடைய மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ் வில்வதுரை, 27, மற்றும் அவரது கூட்டாளிகளான இசக்கிராஜா, 30, ரவிகுமார், 30, இசக்கிராஜாவின் மனைவி இளவரசி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ராகினி, 24, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.முகநுால் நட்பின் மூலம், ராகினிக்கு வழங்கிய, 5 லட்சம் ரூபாய் பணத்தை மாரிமுத்து திருப்பி கேட்டுள்ளார். பணம் கேட்டு தொல்லை கொடுத்த மாரிமுத்துவை, தீர்த்து கட்ட வேண்டும் என, போலீஸ் நண்பரான வில்வதுரையிடம் ராகினி தெரிவித்து உள்ளார்.

அதன்படி, பணம் திருப்பி தருவதாக ராகினி அழைத்ததன்படி, கடந்த மே மாதம் 30ம் தேதி, மாரிமுத்து திருநெல்வேலிக்கு சென்றார். அங்கு காத்திருந்த போலீஸ் வில்வதுரை மற்றும் அவரது கூட்டாளிகள், மாரிமுத்துவை காரில் கடத்தி சென்று, கழுத்தை நெரித்து கொன்று, பெரிய கற்களை கட்டி குளத்தில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மாரிமுத்து மாயமானது குறித்து, கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்த நிலையில், அதை கொலை வழக்காக மாற்றம் செய்து, கைதான நான்கு பேரை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ராகினியை, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் 13 சவரன் நகை பறிப்பு கொளத்தூரில் மர்மநபர்கள் கைவரிசை

ராஜமங்கலம்:கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் உட்பட இருவரிடம், மர்மநபர்கள் நகை பறித்து சென்றனர்.

கொளத்துார், அய்யப்பா நகர் 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரிகா, 54. இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணி அளவில், கொளத்துார், ஜெயராம் நகரில் இருந்து, தன் கணவருடன் இரு சக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.கொளத்துார், செந்தில் நகர் 2வது பிரதான சாலையில் சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், சந்திரிகாவின் 13 சவரன் செயினை பறித்து தப்பி சென்றனர்.

இது குறித்து ராஜமங்கலம்போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்தி.நகரைச் சேர்ந்தவர் வனஜா, 56. இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணி அளவில், தன் மகளுடன் பெரம்பூரில் இருந்து, இரு சக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அயனாவரம், மேடவாக்கம் சாலையை கடந்த போது, ‘பல்சர்’ இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், வனஜாவின் 4 சவரன் செயினை பறித்து சென்றனர். இது குறித்து, தலைமை செயலக குடியிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.