ஒடிசாவின் தேசிய வனப்பகுதியில் குழந்தைகளுக்கான படகு நூலகம்

கேந்திரபாரா: ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் பிதர்கனிகா தேசிய வனப் பகுதி உள்ளது. இங்குள்ள மாங்குரோவ் காடுகள், ராம்சார் ஈரநிலப் பகுதியாக கடந்த 2002-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இங்குள்ள நீர்நிலைகளில் அழியும் நிலையில் உள்ள உவர்நீர் முதலைகள் அதிகளவில் உள்ளன. இந்த மாங்குரோவ் காடுகளையும், இங்குள்ள வனவிலங்குகளையும் பாதுகாக்க வனத்துறை சார்பில் படகு ஒன்று பயன்படுத் தப்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற நிலையில் இருந்த அந்தப் படகை, நிலையான நூலகமாக மாற்ற பிதர்கனிகா வனத்துறை அதிகாரி ஜே.டி.பாடி என்பவர் யோசனை தெரிவித்தார்.

அதன்படி மாங்குரோவ் காடுகளின் நுழைவு பகுதியான தங்கமல் என்ற இடத்தில், இந்தப் படகு நிறுத்தப்பட்டு சிறுவர்களுக்கான நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த 5-ம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினத்தில் திறக்கப்பட்டது. குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், இயற்கையுடன் பிணைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நூலகம் அமைக்கப்பட் டுள்ளது. இதில் 1,500 புத்தகங்கள் உள்ளன. குழந்தைகளை கவரும் வகையில் இந்த படகு நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படகு நூலகத்தில் 32 பகுதிகள் பிரிக்கப்பட்டு அதில் பல அடுக்குகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு, மாங்குரோவ் காடுகள், சுற்றுச்சூழல், அரசு வெளியீடுகள் ஆகியவை இதில் உள்ளன.

நாட்டில் இதுவே முதல் முறை: குழந்தைகளை கவரும் விதத்தில் படகுக்குள்கண்கவர் வண்ண பூச்சுகள் பூசப்பட்டுள்ளன. முதலைகளின் இனப் பெருக்க காலம் என்பதால் மே 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம்தேதி வரை இந்த தேசிய பூங்கா மூடப்பட்டிருக்கும். தற்போது உள்ளூர் பள்ளி குழந்தைகளுக்காக இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா காலம் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியதும், இந்த படகு நூலகத்துக்குள் செல்ல பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். குழந்தைகளுக்கான படகு நூலகம் அமைக்கப் பட்டது நாட்டில் இதுவே முதல் முறையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.