காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியின் 51-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதில்,தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கேக் வெட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது: பாஜக மக்களைத் துன்புறுத்திவருகிறது. அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென மோடியும், அமித்ஷாவும் கனவு கண்டுவருகின்றனர். ஒருவேளை அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய துணைக் கண்டமே இல்லாமல் போய்விடும். எனவே,ஜனநாயகத்தையும் மக்களையும் காப்பாற்ற நாம் களம் இறங்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி, அக்னி பாதை திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார். இத்திட்டத்தை எதிர்த்தால்தான் இந்தியாவுக்கு வருங்காலம் உண்டு. மீண்டும் மோடி அரசு வராமல் தடுக்க அனைவரும் உறுதிஏற்க வேண்டும்.
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வரவும், வலுவாக கால் ஊன்றவும் கோடிக்கணக்கில் பாஜக செலவு செய்கிறது. இதை எல்லாம் முறியடிக்க வேண்டும். பாஜகவை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும்.
தமிழகத்தில் பாஜக கால் ஊன்றாமல் இருக்க திமுக தலைவர்மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதிமுக இரண்டாக உடைய பாஜகதான் காரணம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக விவகாரங்களில் பாஜக தலையிட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுகவை பொம்மைபோல ஆட்டுவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ‘‘ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கையே. இது மக்களுக்கு தெரியும். பாஜக தலைவர் அண்ணாமலை, போலீஸ் வேலையில் இருந்து ஏன் வெளியில் வந்தார் என தெரிவிக்க வேண்டும்.
அதிமுகவில் ஒற்றை, இரட்டை,மூன்று பேர் தலைமை என்றுஎத்தனை பேர் தலைமை வகித்தாலும் பாஜகவின் கைப்பாவையாகத்தான் அவர்கள் இருப்பார்கள். உலகம் உள்ளவரை காங்கிரஸ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது’’ என்றார்.