`கோட்டை வடிவில் மேடை… 25 பாஜக எம்.பி-க்கள் நிச்சயம்’ – பொள்ளாச்சி கூட்டத்தில் அண்ணாமலை

மத்திய அரசின் எட்டு ஆண்டு கால சாதனை விளக்க பாஜக பொதுக் கூட்டம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பொதுக் கூட்ட மேடையை தமிழ்நாடு சட்டசபை தோற்றத்தில் அமைத்திருந்தனர். “பொள்ளாச்சியில் தாமரை ஆட்சி” என்ற வாசகம் எழுதி பாஜக கொடியை பறக்க விட்டிருந்தனர்.

பாஜக பொதுக் கூட்டம் மேடை

“விரைவில் கோட்டையிலும் தாமரை மலரும் என்பதை சொல்லும் விதமாகத்தான் மேடையை சட்டசபை வடிவில் அமைத்தோம்.” என்கின்றனர் பாஜகவினர். கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொள்ள, அண்ணாமலைக்கு தடபுடலாக வரவேற்பு கொடுத்தனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “பொள்ளாச்சி மண்ணிலே பற்ற வைத்துள்ள தீப்பொறியின் தாக்கம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தெரியும். இது காட்டுத் தீயாக மாறி, அசுரர்களை அழித்து, நல்லவர்களுக்கு அக்னியாகவும் இருக்கும். இது சரித்திர மேடை. மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் கோட்டை. இந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவையே தலை நிமிர வைத்துள்ளோம்.

அண்ணாமலை

அமெரிக்கா, ஐரோப்பியா என்று உலக நாடுகள் மோடி ஜி முன்பு மண்டி போட்டு உக்கார்ந்துள்ளனர். மோடி ஜி அமெரிக்கா போய் இந்திய மக்களை கூட்டம் போட்டு சந்திக்கிறார். அமெரிக்க அதிபர், ‘நானும் வரலாமா’ என்று அனுமதி கேட்டு அதற்கு வருகை புரிந்தார்.

எட்டு ஆண்டு கால பாஜக ஆட்சி பூரிப்படைய வைத்துள்ளது. ஓராண்டு கால திமுக ஆட்சி, எப்போது தேர்தல் வரும் என்கிற சலிப்படைய வைத்துள்ளது. ஒரு குண்டூசி எடுத்துவிட்டார்கள் என்று கூட மோடி, அமைச்சர்கள் உள்ளிட்ட யார் மீதும் குற்றச்சாட்டு வைத்திட முடியாது. பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும ஏணி வைத்தால் கூட எட்டாது.

பாஜக பொதுக் கூட்டம்

மண் தான் அந்த ஊரின் அடிப்படை. தற்போது பொள்ளாச்சியில் ஒரு நாளுக்கு 7,000 லோடு மண் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. கையையும், காலையும் கட்டினால் காவல்துறை எப்படி ஓட முடியும். வாரம் வாரம் தமிழ்நாட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை, கருமுட்டை விற்பனை, கொலை என்று தமிழ்நாடு பார்க்காத புது புது குற்றங்கள் இந்த ஆட்சியில் நடந்து வருகின்றன.

எப்படி குற்றம் செய்வது என்பதில் திமுகவினர் பி.ஹெச்.டி முடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு நடந்தத் தேர்தல்களில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனியில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. அந்த நாட்டு தலைவர்கள் கொரோனாவை சரியாக கையாளவில்லை என்று மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால், இந்தியாவில் கொரோனவுக்கு பிறகு நடந்தத் தேர்தல்களில் பாஜக-வின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

பாஜக பொதுக் கூட்ட மேடை

கொரோனாவை மத்திய அரசு சிறப்பாக கையாண்டதற்கு இது ஓர் உதாரணம். `பாஜக மதவெறிக்கட்சி. சிறுபான்மை மக்களை கண்டால் அவர்களுக்கு ஆகாது’ என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்டோர் வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் இரண்டாவது முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கு 52 சதவிகித மக்கள் கிறிஸ்தவர்கள். திமுகவினருக்கு கூகுளில் படிக்க கூடவா தெரியாது. கூகுளைப் பார்த்தாலே இது தெரிந்திருக்கும். முதல்வராக பதவியேற்றதும் ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்.

பாஜக பொதுக் கூட்டம்

ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. இப்போதுவரை அதற்கு எந்த முதல்வரும் பதில் கடிதம் போடவில்லை. தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களும் நீட்டை ஆதரிக்கின்றன. திமுக மட்டும்தான் அதை எதிர்க்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள பாதி தனியார் மருத்துவக் கல்லூரி திமுகவின் ஒரு முக்கியமான தலைவரின் பெயரில் உள்ளது. 2006-11 திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் ஒன்பது தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அவை அனைத்துமே திமுகவினருக்கு சொந்தமானது தான். இதன் காரணமாகத் தான் திமுக நீட் தேர்வை எதிர்க்கிறது.

நீட் தேர்வு

தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் நுழைவுத் தேர்வு எல்லாமே, அந்த நிர்வாகம் ஏற்கெனவே முன் திட்டமிட்டு நடக்கும். நீட் தேர்வு மிகவும் நியாயமாக நடக்கும். அதனால்தான் கோவை இருளர் பழங்குடி மாணவி, தேனியில் பூக்கடை வியாபாரம் செய்பவரின் மகள் மருத்துவப்படிப்புக்கு செல்கின்றனர்.

முதல்வர் சமீபத்தில் தஞ்சாவூர் சென்றார். பதநீரை குடித்து, ‘சர்க்கரை போட்டிருக்கிறதா?’ என கேட்டிருக்கிறார். வயல்களுக்கு நடுவே சிவப்பு கம்பளம் போட்டு பார்வையிட்டிருக்கிறார். இது மட்டும் காமராஜருக்கு தெரிந்திருந்தால், உள்ளே படுத்திருப்பர் எழுந்து வந்திருப்பார். மாட்டுக்கு கொம்பில் இருந்து பால் வருகிறதா, மடியில் இருந்து பால் வருகிறதா என்றே தெரியாது. இவர் எப்படி விவசாயத்தை பாதுகாப்பார்.

முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடித்து அதை புதிய பெயர்களில் இங்கு வெளியிடுகின்றனர். இந்தியாவிலேயே அதிகம் பொய் சொல்வதாலும், ஊழல் செய்வதாலும் தான் நம்பர் 1 முதல்வர் என்று அழைக்கப்படுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணின் மீது கை வைக்க முடியாது. அப்படி வைத்தால் மண்ணோட மண்ணாக பெயர்த்து விடுவார்கள். அப்படி இருக்கிறது சட்டம் ஒழுங்கு. இங்கு அது சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. காவிரி தொடங்கி கச்சத்தீவு வரை பல்வேறு விவகாரங்களில் திமுக துரோகம் செய்துள்ளது.

பாஜக பொதுக் கூட்டம்

திருச்சி மாநகராட்சியை விட மூன்று மடங்கும் அதிகம் சொத்து வரியை பொள்ளாச்சி நகராட்சியில் வசூலிக்கின்றனர். 2024 நாடாளுமன்ற தேர்தலில், தமிழக பாஜக-வில் இருந்து 25 எம்.பிகள் டெல்லி செல்வார்கள்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.