கடலில் காற்றாலை மின் உற்பத்தி.. ஸ்காட்லாந்து பயணம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

கடலில் காற்றாலை மின் உற்பத்தி சம்மந்தமாக 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து செல்வதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

“மின்னகம்” மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன்;20) அண்ணா சாலை மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள மின்னகம் மையத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது மின்னகம் மேலும் சிறப்பாக செயல்பட துறை சார்ந்த அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசுகையில்;  “முதல்வரால் தமிழக மின் நுகர்வோர்களுடைய குறைகளை நீக்கக்கூடிய வகையில், புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த 20.06.2021 அன்று தொடங்கப்பட்டது. இந்த மின்னகம் மின் சேவை மையம் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் மின்னகத்தின் மூலம் 9,16,000 புகார்கள் வரப்பெற்று இருக்கின்றன, இதில் 9,11,000 புகார்களுக்கு, குறிப்பாக, 99.45 விழுக்காடு புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பல்வேறு ஆய்வுப் பணிகளின்போதும், பயணத்தின் போதும் பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் என்னிடம் சொல்வது மின்னகம் ஒரு பயனுள்ளதாக சிறப்பாக அமைந்துள்ளது. வரக்கூடிய ஆண்டுகளில் சிறப்பாக சேவைகளை செய்வதற்காக பல்வேறு முன்னேடுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

செயலி மூலமாக புகார்களை தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

காலி பணியிடங்கள் நிதிநிலைக்கேற்ப, தேவைகளுக்கேற்ப முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரப்பப்படும். வடசென்னை அனல் மின் நிலையம் கருணாநிதியால் 2010ம் ஆண்டு 800 மெகாவாட் அளவிற்கு அனல் மின் நிலையத்தின் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டப் பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு முழுவதுமாக நிறைவு செய்து, டிசம்பர் மாத இறுதிக்குள் வணிக ரீதியாக தொடங்கப்படும்.

எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல 2018-ல் முடிக்க வேண்டியது,  நான்கு ஆண்டுகள் ஆகியும் முடிவுபெறவில்லை. 53 விழுக்காடு பணிகள் தான் முடிவடைந்துள்ளன. பணிகளை மிக விரைவாக முடித்து, முதல் யூனிட் மார்ச் 2024-ல் உற்பத்தியை தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூன் 2024-ல் மற்றொரு யூனிட் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த உற்பத்தியை நிறுவுதிறனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசை பொறுத்தவரை எரிசக்தி துறை மூலமாகவோ நிலக்கரி துறை மூலமாக நமக்கு தேவையான அளவிற்கு 21.92 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டுமென்று கடிதம் வரப்பெற்றுள்ளது.

கடிதம் வருவதற்கு முன்பாகவே முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெண்டர் கோரப்பட்டு இறக்குமதிக்கான ஆணைகள் வழங்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த விலையில் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடலில் காற்றாலை மின் உற்பத்தி சம்மந்தமாக 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து செல்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.