மத்திய அரசு சமீபத்தில் அக்னிபாத் என்ற திட்டத்தை அறிவித்த பிறகு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பதும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி வட மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக மாறி ரயிலுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு தொழிலதிபர்கள் சிலர் வரவேற்பு அளித்துள்ளனர். அக்னிபாத் வீரர்களுக்கு தங்களுடைய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
திடீரென வேகமெடுக்கும் ரஷ்யா – இந்திய வங்கி சேவை.. இதுதான் காரணமா..?!
அக்னிபாத் வீரர்கள்
குறிப்பாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நடக்கும் வன்முறைகள் வருத்தம் அளிக்கின்றன என்றும் இந்த திட்டம் முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோது நான் இதனை வரவேற்கிறேன் என்றும் இந்த திட்டத்தின் மூலம் ஒழுக்கம், திறமை கொண்ட வீரர்கள் நமக்கு கிடைப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
மேலும் அக்னிபாத் வீரர்களுக்கு தகுதி வாய்ந்த பணி வழங்குவதற்கு மஹிந்திரா நிறுவனம் தயாராக இருக்கிறது என்றும் அறிவித்துள்ளார். மேலும் அக்னிபாத் திட்டத்தை முடித்துவிட்டு வெளியே வரும் வீரர்களின் தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
டிவிஎஸ் நிறுவனம்
அதேபோல் டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு அவர்களும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை இந்த திட்டம் ஏற்படுத்தும் என்றும் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பெரிதும் பங்களிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகத்தை வழிநடத்த அக்னிபாத் வீரர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களின் அடிப்படையில் அவர்களுக்கு வேலை மற்றும் உயர்கல்வி வழங்கப்படும் என மத்திய பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் அக்னிபாத் திட்டத்தில் இருந்து வெளியேறும் வீரர்களுக்கு உயர் கல்வி மிகவும் எளிதாக இருக்கும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிரந்தர வேலைவாய்ப்பா?
இத்திட்டத்தில் இணைந்து 4 ஆண்டுகளில் வெளியே வரும் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக தொழிலதிபர்கள் சிலர் கூறினாலும் அவர்கள் தரும் வேலைவாய்ப்பு நிரந்தர வேலை வாய்ப்பாக இருக்குமா? அல்லது பகுதி நேர வேலை வாய்ப்பாக இருக்குமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தொழிலதிபர்கள்
பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலில் 6 மாதம் அல்லது ஒரு வருடம் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுத்து அதன் பின்னர் அதிலிருந்து ஒரு சிலர் அதிலிருந்து பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அதேபோல் அக்னிபாத் திட்டத்தில் இருந்து வரும் வீரர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் தான் வேலை கிடைக்குமா? அல்லது நேரடியாக நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்குமா? என்பதை தொழிலதிபர்கள் விளக்கவில்லை.
விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்த நிலையில் ஒரு பக்கம் இந்த திட்டத்திற்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் தொழிலதிபர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை உறுதியாக அமல் படுத்தும் நோக்கத்தில் உள்ளது என்பதும் ஜூன் 24-ஆம் தேதி முதல் அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்றும் அறிவித்துள்ளன. மேலும் ஜூலை 24ஆம் தேதி ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Indian industries welcomes agniveers for job opportunities
Indian industries welcomes agniveers for job opportunities | அக்னி வீரர்களை வரவேற்கும் முன்னணி நிறுவனங்கள்: ஆனால் அதிலும் ஒரு சிக்கல்!