‘அக்னிபாத்’ திட்டம் மூலம் ஆள்சேர்ப்பு! அறிவிப்பு வெளியிட்டது இந்திய ராணுவம்…

டெல்லி: ‘அக்னிபாத்’ திட்டம் மூலம் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பானையை இந்திய ராணுவம் வெளியிட்டு, விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரியையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தில் இருந்து ஆள்சேர்ப்பு பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரு ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆள் சேர்க்கப்படாத நிலையில், நடப்பாண்டு, 4 ஆண்டு ஒப்பந்த முறையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் என்ற திட்டத்தை மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பல மாநிலங்களில் வன்முறை வெறியாட்டங்களும், ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவமும் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், அக்னிபாத் திட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என அறிவித்துள்ள மோடி அரசு, பணியில் சேர்வதற்கான வயது வரம்பில் தளர்வு அறிவித்தது. மேலும், 4 ஆண்டு பணிக்குப் பிறகு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநில அரசுகளும் அக்னி வீரா்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ராணுவத்தில் சேர்க்க மாட்டோம் என முப்படைகளின் தளபதிகளும் அறிவித்தனர். ‘அக்னிபாத்’ திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று ராணுவ விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலா் அனில் புரி நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அக்னிபாத் திட்ட பணிகளுக்கான விண்ணப்பம் பதிவு ஜூலையில் தொடங்க உள்ளதாகவும், joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.