சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாருதல் மற்றும் தூய்மைப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு.!

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா உத்ததவிட்டுள்ளார்.

சென்னை மாநராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களுக்குட்பட்ட மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னையில் 48.80 கிலோ மீட்டர் நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட தியாகராய நகர், நந்தனம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளின் வழியே மாம்பலம் கால்வாயானது சுமார் 5.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடந்து நந்தனம் பகுதியில் அடையாறு வழியாக கடலில் சென்று சேர்கிறது.

இந்த மாம்பலம் கால்வாயானது தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-113, வித்யோதயா பிரதான சாலையில் தொடங்கி தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-169 நந்தனம் பகுதியில் அடையாறில் கலக்கிறது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், மாம்பலம் கால்வாய் தொடங்கும் இடமான தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-113, வித்யோதயா பிரதான சாலையில் ஆய்வு மேற்கொண்டு அங்கு கால்வாயில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறுபராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்களைக் கொண்டு மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள், மாம்பலம் கால்வாய் தொடங்கும் வித்யோதயா பிரதான சாலையில் தொடங்கி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியான பத்திகரை திட்ட பகுதி வழியாக, ஜி.என்.செட்டி சாலை, கிரியப்பா சாலை, விஜயராகவா சாலை மற்றும் வெங்கட் நாராயணா சாலை ஆகிய பகுதிகளில் மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாம்பலம் கால்வாயில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய சிறுபராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னை குடிநீர் வாரிய அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாம்பலம் கால்வாய் கரையோரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், திடக்கழிவுகளும் கொட்டப்படுவதை பார்வையிட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், தூய்மைப் பணிகளில் ஈடுபடும் உர்பேசர் சுமித் நிறுவனத்தின் அலுவலர்களை அழைத்து உடனடியாக இப்பகுதிகளில் தீவிர தூய்மைப் பணியினை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும் இந்தப் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திடக்கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி மற்றும் உர்பேசர் சுமித் நிறுவன அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், அந்தப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளான பத்திக்கரை திட்டப் பகுதி, திரு.வி.க.நகர் குடியிருப்பு அன்பு நகர், ஆலையம்மன் கோயில் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் மாநகராட்சியின் சார்பில் நாள்தோறும் திடக்கழிவுகள் வீடுகள் தோறும் வந்து சேகரிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

பின்னர் அவர்களிடம் குப்பைகளை மக்கும் மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், இந்த ஆய்வின்போது மாம்பலம் கால்வாய் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஒரு சில இடங்களில் கழிவுநீர் இணைப்பு கால்வாயில் கலப்பதை பார்வையிட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், உடனடியாக அந்த இணைப்புகளை அடைக்கவும், இந்தப் பகுதிகளில் கழிவுநீர் இணைப்பு ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் அவர்களுடன் ஆலோசனை செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ஆர்.கிர்லோஷ் குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.