ஒரு காதலனை ஏவி மறு காதலன் கொலை.. ’ராங் அடி’ ராகினியை தேடும் போலீஸ்..! முகநூலில் காதலில் விழுந்தவர்களின் பரிதாபம்

நெல்லை அருகே முகநூல் மூலம் அறிமுகமான தனியார் நிறுவன மேலாளரை காதல் வலையில் வீழ்த்திய இளம் பெண் ஒருவர், அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு, போலீஸ் காதலனை ஏவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் மாரிமுத்து.

கடந்த மே மாதம் 25ஆம் தேதி சொந்த ஊரான மதுரைக்கு செல்வதாக கூறி விடுப்பில் சென்றவர் மாயமானார், மாரிமுத்துவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் திருமலை , கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் மாரிமுத்து மாயமானது தொடர்பாக புகார் அளித்தார்.

மாரிமுத்துவின் கைபேசி எண்ணை வைத்து துப்பு துலக்கிய போலீசார், கடைசியாக அவர் நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசி இருப்பதை வைத்து அங்கு விசாரிக்க சென்றனர் அந்த பெண்ணின் வீடு பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டில் தங்கிருந்த ராகினி என்பவர் தலைமறைவாகி இருந்தார்.

இதையடுத்து ராகினி பயன்படுத்திய செல்போன் தொடர்புகளை வைத்து துப்பு துலக்கி ய போலீசார், மணிமுத்தாறை சேர்ந்த காவலர் வில்வதுரை என்பவரை பிடித்து விசாரித்த போது மாரிமுத்துவுக்கு நடந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.

மாரிமுத்துவை முகநூல் மூலம் காதல் வலையில் வீழ்த்திய ராகினி அவரிடம் நிறைய பணம் இருப்பதை தெரிந்து கொண்டு ,காதல் மொழி பேசி நேரில் சந்திக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை கறந்ததாக கூறப்படுகின்றது.

ஆனால் மாரிமுத்துவை நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்ததால், தான் கொடுத்த பணத்தை அவர், ராகினியிடம் திருப்பிக் கேட்டதாக கூறப்படுகின்றது. இதனிடையே ராகிணியுடன் முகநூலில் அறிமுகமாகி நேரடி தொடர்பில் இருந்த மணிமுத்தாறு 2 வது பிரிவு காவலரான வில்வ துரை, தோழி இளவரசி ஆகியோருடன் சேர்ந்து மாரிமுத்துவை தீர்த்துக்கட்ட ராகினி முடிவு செய்ததாக கூறப்படுகின்றது. கும்பிடிப்பூணிடிக்கு தானே நேரில் வந்து சந்திப்பதாகவும் இருவரும் ஜாலியாக சுற்றலாம் என்று மாரிமுத்துவிடம் ஆசைவார்த்தை கூறி உள்ளார்

இதனை நம்பி கடந்த மே 26 ஆம் தேதி மாரிமுத்து அலுவலகத்தில் ஊருக்கு செல்வதாக கூறி புறப்பட்டு காத்திருந்த நிலையில் ராகினி சொன்ன காரில் கும்பிடிப்பூண்டிக்கு சென்ற காவலர் வில்வதுரை கூலிப்படையை சேர்ந்த இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகியோர் கும்மிடிப்பூண்டியில் இருந்து மாரி முத்துவை காரில் ஏற்றி சங்கரன்கோவிலுக்கு கடத்திச் சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை சாக்கு பையில் அடைத்து ராஜபாளையத்தில் உள்ள புனல்வேலி கண்மாயில் வீசிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மாரிமுத்துவின் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் வழக்கில் தொடர்புடைய காவலர் வில்வதுரை, ராகினியின் தோழி இளவரசி கூலிப்படையை சேர்ந்த இசக்கி ராஜா, ரவிக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர் , முக நூல் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட காதலர்களை தேர்வு செய்து பணம் பறிப்பு மோசடியில் ஈடுபட்டதோடு, கொலை வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள ‘ராங் அடி’ ராகினியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முக நூல் நட்பு என்று முகம் தெரியாத பெண்களிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டால் முடிவில் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.