சென்னை: “இரண்டாவது தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் கரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவாதாகவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமாவதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து…
“கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் உலக அளவிலும், இந்திய அளவிலும் சமீப நாட்களாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 500-ஐ கடந்து வருகிறது. நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும், பாதுகாப்பாக இருப்பதும்தான் அவசியமாக இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், தடுப்பூசி செலுத்துவது ஓர் இயக்கமாகவே மாற்றப்பட்டது. இதுவரை 30 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே 30 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டும் தான். தொடக்க காலத்தில் தடுப்பூசி பணிகள் கொஞ்சம் தொய்வாகவே நடைபெற்று வந்தது. கடந்த 2021 ஜனவரியில் தடுப்பூசி போடப்பட்ட நாள்கள் தொடங்கி நான்கு ஐந்து மாதங்கள் வரை தடுப்பூசி செலுத்தும் தினசரி சராசரி என்பது 61,400 என்ற அளவில் இருந்தது.
அப்போது தடுப்பூசி தாராளமாக கிடைத்தும் கூட ஊசி செலுத்தப்படாத நிலை இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் முதல்வர் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்தியதன் நோக்கம், விளைவின் காரணமாக தினசரி 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 11 கோடியே 35 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதல் தவணை தடுப்பூசி 95 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி 85 சதவீத்தை நெருங்கி விட்டது.
இப்போது பூஸ்டர் தடுப்பூசி மிகவும் அவசியமான ஒன்று. தடுப்பூசி போடப்பட்டு ஒரு வருடம் கழிந்த நிலையில், அந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். ஏற்கெனவே நமக்கு 88 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. தற்போது அது குறையத் தொடங்கியுள்ளது. அதற்கு காரணம். இரண்டாவது தவணைத் தடுப்பூசி செலுத்தி 9, 10 மாதங்கள் கடந்து விட்டது. அதனால்தான் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று கூறப்பபடுகிறது.
தற்போது, 60 வயதைக் கடந்தவர்களுக்கு, 60 வயதைக் கடந்து இணை நோய் உள்ளவர்களுக்கு, முன்களப்பணியாளர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளில்தான் செலுத்திக் கொள்ளவேண்டி உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு ஒரு விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை ரூ.255, ஜிஎஸ்டி ஆகியவற்றுடன் மருத்துவமனைக்கான சேவைக்கட்டணம் சேர்த்து ஒரு தடுப்பூசியின் விலை ரூ.386 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பொதுமக்கள் பணம் கட்டி, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் கொஞ்சம் தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்தநிலையில், ரோட்டரி சங்கத்திடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் நிதியளிப்பு மூலமாக இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மிக விரைவில் பத்து தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து, அங்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
முழுமையான பேட்டி – வீடியோ வடிவில் இங்கே…