திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் முனுசாமி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரமம் நடத்திவருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக்கிறார். முனுசாமி அந்த மாணவிக்கு நாகதோஷம் இருப்பதாகக் கூறி ஆசிரமத்திலேயே தங்கவைத்திருக்கிறார்.
ஆசிரமத்தில் தங்கியிருந்த மாணவியை வைத்துத் தொடர்ந்து அமாவாசை, பௌர்ணமி நாள்களிலும், இரவு நேரங்களிலும் சாமியார் முனுசாமி பூஜை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஆசிரமத்திலிருந்த மாணவி வாந்தி எடுத்துச் சோர்வடைந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவியை அவரின் உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், பூச்சு மருந்து அருந்தியிருப்பதாகத் தெரிவித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி மாணவி உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆசிரமத்திலிருந்த மாணவி இறந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 6-ம் தேதி திருவள்ளூர் சி.பி.சி.ஐ.டி காவல் துறைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், அந்த மாணவியை முனுசாமி திட்டமிட்டு பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும், தற்கொலைக்குத் தூண்டியதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் நேற்றைய தினம் சாமியார் முனுசாமியை கைதுசெய்தனர். திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.