கியூபெக் மாகாணத்திலுள்ள Saguenay நகரில் வாழும் மக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்தான், Saguenay நகரில் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீடு முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில், மீண்டும் பெரியதொரு நிலச்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
53 வீடுகளில் வசிக்கும் சுமார் 101 மக்கள் சனிக்கிழமை இரவு துவங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்று, ஓரிடத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 24 வீடுகளில் வாழும் 79 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், அந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.
தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் எப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தப் பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஒன்று ஏற்பட இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாலேயே மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர்கள், அது நிச்சயம் நிகழத்தான் போகிறது, ஆனால், அது எப்போது என்பதும், அது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதும்தான் விடயம் என்கிறார்கள்.