கடலில் மூழ்கி டாக்டர் பலி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ளது வர்க்கலா. சர்வதேச சுற்றுலாத்தலமான இங்குள்ள கடற்கரையின் அழகை ரசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சனி, ஞாயிறு உள்பட விடுமுறை தினங்களில் இந்த கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி விடுமுறை நாளான நேற்று மாலையும் வர்க்கலா கடற்கரையில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். கடற்கரைக்கு வருபவர்களில் பலர் கடலில் இறங்கி குளிப்பதும் உண்டு. கோவை பல்லடம் பகுதியை சேர்ந்த பல் டாக்டரான அஜய் விக்னேஷ் (24) தனது நண்பர் பாலசிவராமனுடன் (23) வர்க்கலாவுக்கு சுற்றுலாவுக்காக வந்திருந்தார்.இங்குள்ள ஓடயம் என்ற இடத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேரும் ராட்சத அலையில் சிக்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பேரையும் அலை இழுத்துச் சென்றது. உடனே அங்கு இருந்த பாதுகாப்பு வீரர்கள் 2 பேரையும் போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.பின்னர் வர்க்கலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஜய் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் பால சிவராமனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல வர்க்கலா காப்பில் பகுதியில் கடலில் குளித்த மாஹின் (30) என்பவரும், பாபநாசம் என்ற பகுதியில் குளித்த அஜீஷ் (29) என்பவரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். ஒரே நாளில் 3 பேர் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.