திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிட 20 கோடியில் நவீன கட்டிடம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடுவதற்காக ₹20 கோடியில் நவீன கட்டிடம் கட்டும் பணியை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள உண்டியல்களில் பணம் மட்டுமின்றி தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல் ஒருநாளைக்கு 2 முறை நிரம்பும். ஆனால் தற்போது பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் 9 முதல் 13 முறை வரை உண்டியல் நிரம்புகிறது. இவ்வாறு வரும் காணிக்கைகள் ஏழுமலையான் கோயில் கருவறையின் பின்புறம் உள்ள மண்டபத்தில் பரக்காமணியில் எண்ணப்படுகிறது. ஆனால் இங்கு போதிய இடவசதி இல்லாததால் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.எனவே, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பரக்காமணி கட்டிடத்தை கட்ட தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடம் எதிரே 14,962 சதுர அடி பரப்பளவில் ₹20 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இதனை பெங்களூருவை சேர்ந்த முரளிகிருஷ்ணா என்ற பக்தரின் நன்கொடை மூலம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சிசிடிவி கேமராக்கள், உள்கட்டமைப்பு வசதிகள், சில்லறை நாணயங்களை எண்ணுவதற்காக ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன இரண்டு இயந்திரங்கள், காணிக்கை எண்ணும் இடத்தை சுற்றி புல்லட் புரூப் கொண்ட கண்ணாடி பேழைகள் சுற்றி அமைக்கப்பட உள்ளது. நான்கு தளங்களுடன் ₹20 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிரமோற்சவத்தின்போது இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணி புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆண்டுதோறும் அதிகரிக்கிறது2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சிலமாதங்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமலும், குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் அந்த நிதி ஆண்டு மட்டும் ₹545.95 கோடியாக காணிக்கை குறைந்தது. தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் ₹257.58 கோடி காணிக்கையாக வந்துள்ளது. மே மாதத்தில் மட்டும் ₹130 கோடி காணிக்கை வந்திருப்பது இதுதான் முதல்முறையாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.