சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், சேலம், கோவை, வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 21-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக் கூடும்.
தாம்பரத்தில் 13 செ.மீ. மழை
20-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 13 செமீ, சென்னை தரமணி, கொரட்டூரில் தலா 11 செமீ, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், காட்டுக்குப்பம், சென்னை விமான நிலையம், ஆலந்தூர், கிண்டி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் 9 செமீ, சென்னை நுங்கம்பாக்கம், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, திருவாலங்காடு ஆகிய மாவட்டங்களில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.