புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்யக்கோரிய உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முப்படைகளில் 4 ஆண்டு கால சேவையில் இளைஞர்களை சேர்க்கும் வகையில் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கும் நிலையிலும், ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அக்னிபாதை திட்டம் என்பது சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ரீதியாக தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கூறி உள்ளார்.இதையடுத்து இந்த மனு தலைமை நீதிபதியின் பரிந்துரையின் படி விரைவில் பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அக்னிபாதை திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டுமென ரிட் மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.