தென் மாவட்டங்களில் உள்ள நவக்கிரக தலங்களை மேம்படுத்த நடவடிக்கை – அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தென்மாவட்ட நவக்கிரகத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரசித்தி பெற்ற நவக்கிரக கோயில்கள், நவகயிலாய கோயில்கள், பஞ்ச சபை, அட்டவீரட்டானத் தலங்கள் ஆகிய கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உட்பட பாண்டிய நாட்டு நவக்கிரக கோயில்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை செயல்படுத்தும் வகையில் மதுரை மாவட்டத்தில் மதுரை முக்தீஸ்வரர் கோயில் (சூரியன்), திருப்பரங்குன்றம் முருகன் கோயில் (செவ்வாய்), குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் (குரு), கொடிமங்கலம் நாகமலை நாகதீர்த்தம் நாகேஸ்வரர் கோயில் (கேது), தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பால்வண்ண நாதர் கோயில் (சுக்கிரன்), சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேம்பத்தூர் கைலாசநாதர் கோயில் (புதன்), மானாமதுரை சோமநாதசுவாமி கோயில் (சந்திரன்), தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சுயம்பு சனி பகவான் கோயில் (சனி), உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோயில் (ராகு) ஆகிய நவக்கிரகத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.