ஹைதராபாத்: செகந்திராபாத் ரயில் எரிப்பு வழக்கில் இதுவரை 52 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காண 500-க்கும் மேற்பட்டோர் நேற்று சிறைச்சாலை முன் குவிந்தனர்.
அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஸ்ட்கோஸ்ட் ரயிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். மேலும், செகந்திராபாத் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் உள்ள கடைகள், பார்சல் சர்வீஸ், ஓட்டல்கள் போன்றவற்றை அவர்கள் உடைத்து நொறுக்கினர். இதனால் தென்மத்திய ரயில்வே துறைக்கு ரூ. 12 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை தொடர்பாக 52 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்து அவர்களை சட்டம் -ஒழுங்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த வழக்கும் சட்டம்-ஒழுங்கு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 52 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு, ஹைதராபாத் செஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அவர்களது பெற்றோர், உறவினர், நண்பர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று சிறைச்சாலை முன் குவிந்தனர். “எங்களது பிள்ளைகள் மிகவும் நல்லவர்கள். அவர்களை யாரோ தூண்டி விட்டு இப்படி செய்துள்ளனர். முதலில் தூண்டிவிட்டவர்களை கைது செய்யுங்கள்” என அவர்கள் கண்ணீருடன் கூறினர்.
இந்நிலையில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் நேற்று ஆந்திர மாநிலம், கம்பம் பகுதியில் உள்ள சாய் ராணுவ பயிற்சி அகாடமியில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தலைவர் சுப்பாராவை ஆந்திர போலீஸார் ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வரு கின்றனர். இந்த அகாடமி மாணவர்களுக்கு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி, அவர்களை தூண்டிவிட்டு, ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியதாக சுப்பாராவ் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதனால் சுப்பாராவிடம் மத்திய புலனாய்வு அதிகாரிகளும் விசாரிக்க உள்ளனர்.