திருவண்ணாமலையில் ராசிப்படி அஷ்டலிங்க வழிபாடு: ஓர் எளிய வழிகாட்டல்!

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும் இந்தத் தலத்தின் சிறப்பம்சங்கள் என்பதை நாமறிவோம். இந்த அஷ்ட லிங்க சந்நிதிகளில் உங்கள் ராசிக்கு விசேஷ பலன்கள் தரும் சந்நிதி எது, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்த விவரங்களை அறிவோமா?

திருவண்ணாமலை

திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் எண்திசைகளிலும் திசைக்கு ஒன்றாக, அஷ்டலிங்க சந்நிதிகள் அமைந்துள்ளன. அஷ்ட திக் பாலகர்கள் ஒவ்வொருவரும் ஒரு லிங்கத்தை வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் வந்து வழிபடுவதுடன், கிரிவலப் பாதையில் எண்திசைகளில் இருக்கும் அஷ்டலிங்கத்தையும் தரிசித்து வழிபடுவதால் சகல செளபாக்கியங்களும் பெருகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக இந்த அஷ்ட லிங்கங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ராசியினருக்கு அருள் தரும் மூர்த்தங்களாய் அருள்பாலிக்கின்றன.

இந்திர லிங்கம்

ரிஷபம் – துலாம் ராசியினர் வழிபட வேண்டிய இந்திர லிங்கம்!

அண்ணாமலையார் கோயிலின் ராஜ கோபுரத்தின் அருகில், கிழக்கு திசையில் அமைந்திருப்பது இந்திர லிங்கம். இந்திரன் வழிபட்ட லிங்கம் என்பதால் இந்தப் பெயர். ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சந்நிதி இது. சுக்கிரன், சூரியனுக்கு உரிய திசைக்கோயில் என்பதால் இங்கு வணங்கினால் அரச போக வாழ்வை அடையலாம்.

அக்னி லிங்கம்

சிம்ம ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய அக்னி லிங்கம்

தென்கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மூர்த்தி அக்னி லிங்கம். சந்திர னுக்கு அக்னி வடிவில் காட்சியளித்த லிங்கமே குளிர்ந்து, இங்கு அக்னி லிங்கமாகக் காட்சியளிக்கிறதாம். சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்துக்கு அருகில் உள்ள இந்த ஆலயத்துக்கு வந்து இறைவனை வழிபட்டால், மனச் சஞ்சலங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

யம லிங்கம்

விருச்சிக ராசியினர் வழிபடவேண்டிய யம லிங்கம்

தென்திசை அதிபதியான யமன் வழிபட்ட லிங்கம் இது. கிரிவலம் சென்ற யமனுக்குச் சிவபெருமான் தாமரை மலரில் லிங்கமாகத் தோன்றி அருளினார். இந்த ஆலயத்து இறைவனை வழிபடுவதால், ஆயுள் பலம் உண்டாகும். வீண் விரயங்கள் நீங்கும். விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய மூர்த்தி இவர்.

நிருதி லிங்கம்

மேஷ ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய நிருதி லிங்கம்

தென்மேற்கு திசையின் அதிபதி நிருதி பகவான். இவருக்கு நிருதீஸ்வரராக காட்சி அளித்த ஈசன் இங்கு அருள்கிறார். இவரை வழிபட்டால், குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. மேஷ ராசிக்காரர்களின் பிரார்த்தனைத் தலம் இது. ராகு பகவான் இந்தத் திசைக்கு அதிபதி என்பதால் இங்கு வழிபட்டால் மன அமைதியைப் பெறலாம்.

வருண லிங்கம்

மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய வருண லிங்கம்

வருண பகவானுக்கு ஈசன் நீர் வடிவ லிங்கமாக தரிசனம் அருளிய இடம் இது. மேற்கு திசையில் அமைந்திருக்கும் இந்த லிங்கத்தை வணங்கினால் அந்தத் திசையின் அதிபதியான சனி பகவானின் அருளைப் பெறலாம். தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் இடம் இது. மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் இவரை வழிப்பட்டு வாழ்வில் சகல வளங்களையும் பெறலாம்.

வாயு லிங்கம்

கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய வாயு லிங்கம்

வடமேற்கு திசையில் அமைந்திருக்கும் ஆலயம் இது. பஞ்ச கிருதிக்கா என்ற தேவலோக மலரின் வாசமாகத் தோன்றிய ஈசன், வாயு பகவானை இங்கு ஆட்கொண்டாராம். கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தலம் இது. இங்கு வந்து வணங்குபவர்களுக்கு, வடமேற்கு திசையின் அதிபதியான கேது பகவான் சகல யோகங்களையும் அளிப்பார்.

குபேர லிங்கம்

தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குபேர லிங்கம்

செல்வங்களை இழந்த குபேரன், இந்த இடத்தில்தான் அண்ணா மலையாரைத் தரிசித்து வணங்கி, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றார் என்கிறது புராணம். இந்த லிங்க மூர்த்தியை வழிபடுவதால் குபேர யோகம் ஸித்திக்கும்; குரு பகவானின் திருவருள் கிட்டும். தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சுவாமி இவர்.

ஈசான்ய லிங்கம்

மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ஈசான்ய லிங்கம்

வடகிழக்கு திசையில் சுடலையின் அருகில் அமைந்துள்ளது ஈசான்ய லிங்கம். நந்தீஸ்வர பகவான் வணங்கிய மூர்த்தி இவர். ஈசனைத் தவிர எதுவுமே சாஸ்வதமில்லை என்பதை உணர்த்தும் ஞான சந்நிதி இது. இந்தத் திசையின் அதிபதி புதன் என்பதால் இங்கு வணங்கினால், கல்வி-கலைகளில் தேர்ச்சி பெறலாம். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய சந்நிதி இது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.