Many districts of ADMK units took resolution to support EPS: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்ட அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.
வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என அதிமுக நிர்வாகிகள் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் இல்லங்கள் பரபரப்பாக காணப்படுகிறது. இ.பி.எஸ் ஒற்றை தலைமையாக வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம், ஓ.பி.எஸ் தரப்பில் தற்போதைய நிலை தொடர வேண்டும். அல்லது ஓ.பி.எஸ் தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ்-ஐ ஓரம் கட்டும் எண்ணம் கிடையாது – ஜெயக்குமார்
இதனையடுத்து, அதிமுக நிர்வாகிகள் பலரும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் தனித்தனியாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கட்சியின் மிகச் சில மூத்த நிர்வாகிகள் இருவரையும் சமாதானப் படுத்த முயற்சித்து வருகின்றனர்.
இதனிடையே இ.பி.எஸ்-க்கு ஆதரவாக 90% மாவட்ட செயலாளர்களும், தலைமை கழக நிர்வாகிகளும் உள்ளதாக தகவல் வெளியானது. இதில் குறிப்பாக தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் தலைமையில் இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தநிலையில், ஆதரவாளர்களும் நிர்வாகிகளும் கடந்த சில நாட்களாக, ஒற்றைத் தலைமை வேண்டும் என மட்டும் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது ஒற்றைத் தலைமையாக இ.பி.எஸ் வர வேண்டும் என வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் அடுத்தகட்டமாக, பல்வேறு அதிமுக மாவட்ட கழகங்கள் சார்பாக இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இதில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பாக, இ.பி.எஸ் ஒற்றை தலைமையேற்று, அதிமுகவை வழிநடத்த வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதேபோல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்ததாக திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில், ஒற்றை தலைமையாக இ.பி.எஸ் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக மேலும் சிறப்பாக செயல்பட ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முடிவை திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஒற்றைத் தலைமையாக இ.பி.எஸ் வர வேண்டும் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.