ரேசன் தொடர்பான பொருட்களை கடத்தியதாக 7 நாட்களில் நடந்த சோதனையில் 171 பேரை கைது செய்துள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்மைக்காலமாக பல இடங்களில் கடத்தல் ரேசன் பொருட்களை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான 7 நாட்களில் மட்டும் ரேசன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக மொத்தம் 171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,063 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி மற்றும் 45 லிட்டர் பொதுவிநியோகத் திட்ட மண்ணெண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 9 சமையல் எரிவாயு உருளைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.11. 74 லட்சம் ஆகும். இந்த குற்றங்களில் ஈடுபட்ட 171 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM