தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடையாகச் செயல்படுமா? தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தடை முறை எதுவும் தேவையில்லை என்பது உண்மையா?
பதில் சொல்கிறார், கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி…
நீங்கள், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பட்சத்தில், அதாவது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதே உங்களுக்கு ஒருவிதமான கருத்தடை முறையாகச் செயல்படும் என்பது உண்மைதான். இதை `லாக்டேஷன் அமனோரியா முறை’ (The Lactational Amenorrhea Method (LAM) என்று சொல்வோம். ஆனால், இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
தாய்ப்பால் கொடுப்பதையே உங்களுக்கான கருத்தடையாகப் பயன்படுத்த நினைத்தால், தாய்ப்பால் தவிர்த்து குழந்தைக்கு வேறெந்த உணவையுமே தரக்கூடாது என்பது அவசியம். பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி, தாய்ப்பாலை வெளியேற்றிக் கொடுப்பதும் கூடாது.
தாய்ப்பாலுடன் சேர்த்து ஃபார்முலா உணவுகள் (பவுடர் பால்) போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது. குழந்தைக்கு, தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும்பட்சத்தில், பகல் வேளைகளில் ஒவ்வொரு 4 மணிநேரத்துக்கொரு முறையும், இரவில் ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கொரு முறையும் கொடுக்க வேண்டும்.
இப்படிச் செய்கிறவர்களுக்கு, பீரியட்ஸ் வராமலிருக்கிறதா என்பதும் மிக முக்கியம். இந்தவகை கருத்தடை முறையானது, முதல் 6 மாதங்களுக்குத்தான் பலனளிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஆறு மாதங்களைக் கடந்துவிட்ட பிறகு குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்துவிட்டால், இந்த வகை கருத்தடை முறை பலன் தராது. முதல் ஆறு மாதங்களுக்கு, இது 98 சதவிகிதம் பலன்தரும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் கடைப்பிடித்து, வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பெண்களிலும், 100-ல் இரண்டு பேர் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்பிருப்பதால் இதை 100 சதவிகித நம்பகமான முறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஆனாலும் ஹார்மோன்களை உள்ளடக்கிய கருத்தடை மாத்திரைகளுக்கு இணையான பலன் தரக்கூடியது இது. மிக முக்கியமாக, குழந்தையானது தாயின் மார்பகக் காம்புகளை உறிஞ்சி, பால் குடிக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான், சில வகை ஹார்மோன்கள் உருவாகி, கருமுட்டை உருவாவதைத் தடுத்து, கருத்தடை முறையாகச் செயல்படும். இதைச் சரியாகப் பின்பற்றும் பட்சத்தில், பக்கவிளைவுகள் இல்லாமல் பலன்தரும் முறையாக இருக்கும். செலவில்லை என்பதொரு நல்ல விஷயம்.
அதேநேரம், இந்த முறையைப் பின்பற்றுவோருக்கு, பால்வினை நோய்த்தொற்றில் இருந்து எந்தப் பாதுகாப்பும் கிடைக்காது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.