விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது மகளை இந்தியாவிற்கு கொண்டு வர பயணச்சீட்டு ஏற்பாடு செய்து தரவேண்டும் என மத்திய அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார் – சாந்தலட்சுமி தம்பதியினருக்கு திவ்யா சொர்ணமால்யா என்ற மகள் உள்ளார். மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த திவ்யா கடந்த ஒராண்டுக்கு முன்பு உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சென்று படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப தாயார் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அந்த மாணவி எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் தாயார் அங்கு சென்று மகளை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.