யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்பட வேண்டும்

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் தத்தம் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படவேண்டும் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (20) யாழ் மக்களுக்கான எரிபொருள் விநியோகம், அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலில் இவ்வாறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஊடகங்களுக்கு  தெரிவித்தார்.

நாளாந்த கையிருப்பு தகவல்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தினமும் இரண்டு முறை நேரடியாக சேகரிக்கப்படவுள்ளன.

இதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதேச செயலாளர் நியமிக்கவுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

பிரதேச செயலகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்த CEYPETCO தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

மக்கள் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை தெரிவு செய்து அங்கு மாத்திரமே எரிபொருளை பெறும்வகையில் வாகனங்களுக்கான பங்கீட்டு அட்டை முறை ஜூலை 1ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதார சேவை ஊழியர்களுக்கான  எரிபொருள் விநியோகத்துக்கு தனியான ஏற்பாடுகள் செய்யப்படும்.

அரச உத்தியோகத்தர்கள் தமக்கான எரிபொருள் நிலையத்தை தெரிவு செய்து பதிவு செய்யும் வகையில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்கள் திணைக்கள தலைவர்களிடம் மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இதே வேளை ஊடகவியலாளர்களுக்கும் அத்தியாவசிய சேவைகள் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஒவ்வொரு பிரதேச செயலக எல்லைகளுக்குள் அமைந்துள்ள ப.நோ.கூ.ச MPCS நிரப்பு நிலையங்கள் அத்தியாவசியசேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் நுகர்வோரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட குறித்த விலைகளில் அரிசியை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், பிரதேச செயலாளர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.