ஓபிஎஸ் பலம் குறைகிறதா? எத்தனை மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. அவருக்கு ஆதரவாக இருந்த 2 மாவட்டச் செயலாளர்கள் திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியதால் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 10-ஆக குறைந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் மீண்டும் எழுந்ததை அடுத்து, கட்சிக்கு ஓ. பன்னீர்செல்வம் தான் தலைமை வகிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களும், இதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமிதான் தலைமை பதவிக்கு வர வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அதிமுகவில் இரு கோஷ்டியினர் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, யாருக்கு அதிக மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு மொத்தமுள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் 60 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வதுக்கு 12 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
image
இந்நிலையில், நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ ராஜா மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோர் திடீரென இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளராக இருந்த 12 மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது 10-ஆக குறைந்துள்ளது.
இப்போதைய நிலவரப்படி, தேனி மாவட்ட செயலாளர் சையது கான் , சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலக்சாண்டர் , திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் , திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெள்ளமண்டி நடராஜன் , தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆகிய 10 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர்.
இதனிடையே, 8-வது நாளாக இன்றும் ஓ.பன்னீர்செல்வம் தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் வைத்து ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், தர்மர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தன்னை சந்திக்க வந்த தொண்டர்களையும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அந்த சமயத்தில் அங்கிருந்த செய்தியாளர்கள், “பொதுக்குழு நடைபெறுமா?” “நீங்கள் பங்கேற்பீர்களா?” என கேள்வியெழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் திரும்பிச் சென்றுவிட்டார்.
-சுபாஷ்பிரபுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.