அதிக வட்டி என விளம்பரம் செய்த, ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் சொத்துக்களை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் ரூ.1லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.25ஆயிரம் வட்டி, சில இடங்களில் ஆண்டுக்கு ரூ.30ஆயிரம் வட்டி மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம் செய்திருந்தது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து,  ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் 70 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்துக்களை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த மே மாதம் 24ந்தேதி ஆருத்ரா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.  சென்னை அமைந்தகரையில் உள்ள ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் தலைமையகம் மற்றும், சென்னை, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 12 கிளைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ந்த நிறுவனத்தை நடத்தி வரும் ராஜசேகர் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனைக்கு காரணமாக, அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்புதான் என்று கூறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஆருத்ரா  கிளையில்  வெளியான விளம்பரத்தில்,  எங்கள் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டிற்கு மாதம் 36 ஆயிரம் வட்டி தருவோம். ஒரு லட்சம் என்றில்லை முதலீட்டாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது போல் 1 லட்சம் ரூபாய்க்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்கப்படும் என சென்னையில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை முதலீடு செய்தனர். இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள ஆருத்ரா கிளை,  வில்லிவாக்கம், ஆவடியில் உள்ள கிளைகளில்  சென்னை பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, தற்போது, ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.