மாநிலத்துக்கு மாநிலம் மாறும் மதிப்பு… எப்படி நடக்கிறது குடியரசுத் தலைவர் தேர்தல்?

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைவதால், அடுத்த 16-வது குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஜூலை 18-ம் தேதி புதிய குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
image
யார் – யார் வாக்களிக்கலாம்?
குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த எம்எல்ஏக்களும், நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்களிக்க தகுதிப் பெற்றவர்கள் ஆவர். இவர்கள் ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழுமம்) என அழைக்கப்படுகிறார்கள். அதன்படி, மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 233 பேர், எம்எல்ஏக்கள் 4,120 பேர் என மொத்தம் 4,896 மக்கள் பிரதிநிதிகள், வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதே சமயத்தில், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் உள்ள நியமன எம்.பி.க்களால் குடியரசுத் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
போட்டியிடுபவருக்கான விதிமுறைகள் என்ன?
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில் அவரை ஆதரிப்பதாக 50 ‘எலக்டோரல் காலேஜ்’ உறுப்பினர்களும், வழிமொழிவதாக 50 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களும் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த நடைமுறை 1974-ம் ஆண்டு முதலே நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பு வரை 35 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற சூழல் இருந்தது. அந்த சமயத்தில், தேர்தலில் வெற்றி பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லாத நபர்கள் கூட, விளம்பரத்துக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்து வந்தனர். இதனால் வேட்பு மனு பரிசீலனையில் பெரும் இடையூறு ஏற்பட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாகவே, ‘எலக்டோரல் காலேஜ்’ உறுப்பினர்களின் கையெழுத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது.
image
எம்எல்ஏ, எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு என்ன?
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் வாக்குகள் வெவ்வேறு மதிப்புகளைக் கொண்டது. அதன்படி, மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எம்.பி.க்களை போல அனைத்து மாநிலங்களின் எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பும் ஒன்றாக இருக்காது. ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தும், எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு மாறுபடும். மாநிலத்தின் மக்கள்தொகை, சட்டப்பேரவை உறுப்பினர்களின் பலம் ஆகியவற்றின் அடிப்படையில் எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
அதாவது, மாநில மக்கள்தொகையை சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதில் கிடைக்கும் ஈவை, மீண்டும் ஆயிரத்தால் வகுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வரும் மதிப்பே அந்தந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பாக நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அதிகபட்ச ஓட்டு மதிப்பை உத்தரபிரதேச எம்எல்ஏக்கள் கொண்டுள்ளனர். அந்த மாநில எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு 208 ஆகும். அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடும், ஜார்க்கண்டும் இருக்கின்றன. அந்த மாநிலங்களைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு 176. இதை வைத்து பார்த்தால், தமிழ்நாட்டின் ஓட்டு மதிப்பு 234x 176 = 41,184.இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்தின் ஓட்டு மதிப்பும் கணக்கிடப்படுகின்றன. நாட்டிலேயே மிகக் குறைந்த ஓட்டு மதிப்பைக் கொண்ட எம்எல்ஏக்களை கொண்ட மாநிலமாக அருணாச்சல பிரதேசம் இருக்கிறது. அங்குள்ள ஒரு எம்எல்வின் ஓட்டு மதிப்பு 8 மட்டுமே.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.