ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் ஆகிறார் யஷ்வந்த் சின்ஹா?

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த சின்ஹா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.

இந்த தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வேட்பாளராக்க, எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. ஆனால் இதை அவர் ஏற்கவில்லை. இது தொடர்பாக கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், பரூக் அப்துல்லா மற்றும் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இருவரும் மறுத்து விட்டனர். அடுத்த கட்டமாக இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வெளியிட்ட அறிக்கையில், திரிணாமுல் காங்கிரசில் எனக்கு அளித்த மரியாதைக்கும், மதிப்புக்கும் மம்தா பானர்ஜிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இப்போது பெரிய தேசிய நோக்கத்திற்காக கட்சியில் இருந்து விலகி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனது நடவடிக்கையை மம்தா அங்கீகரிப்பார் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதனால் அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் களமிறங்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?
பீகார் மாநிலம், பாட்னாவில் 1937 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு நிலிமா சின்ஹா என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அரசியல் அறிவியலில் 1958 முதுகலை பட்டம் பெற்றார். பாட்னா பல்கலைக்கழகத்தில் 1962 ஆம் ஆண்டு வரை அரசியல் அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.

பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை தனது பதவிக் காலத்தில் வகித்திருக்கிறார். பின்னர், ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இருந்தபோது, மத்திய நிதி அமைச்சராகவும், வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர், பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.