புதுடெல்லி: அக்னி பாதைத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற முழு அடைப்பின்போது நாடு முழுவதும் 500 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
ராணுவத்தில் அக்னி பாதை திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பிஹார் மாநிலத்தில் இளைஞர்கள் கடந்த 5 நாட்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ரூ.700 கோடி அளவுக்கு பொது சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அக்னி பாதைத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத் துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதைத் தொடர்ந்து நேற்று அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 500 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் ரயில்வேக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே அக்னி பாதைத் திட்டத்துக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் சத்யாகிரகப் போராட்டம் நடைபெற்றது. டெல்லி கனாட் பிளேஸ் அருகில் உள்ள சிவாஜி பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை போலீஸார் சிறைபிடித்தனர்.
டெல்லியின் பல்வேறு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியதால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
ஹரியாணாவின் பதேகாபாத் பகுதியில் உள்ள லால் பட்டி சவுக் பகுதியில் இந்தத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. இங்கு சாலை மறியல் போராட்டமும் நடந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோத்தக் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.