அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், “வருகின்ற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், காவல்துறையின் கேள்விகளுக்கு அதிமுக சார்பில் மதியம் ஒரு மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், எம்பி, எம்எல்ஏக்கள் யாராக இருந்தாலும் அனைவரும் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, பொதுக்குழு கூட்டம் பாதுகாப்பு பிரச்சினை குறித்து காவல்துறையை நாங்கள் அணுகுவோம் என்று ஓபிஎஸ் தரப்பும் தெரிவித்தது.
மேலும், பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க கோரி வழக்கு தொடர பெஞ்சமினுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும், மூன்றாவது நபர் ஒருவர் தனிப்பட்ட முறையில் தொடர்ந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது குறிப்பிடத்தக்கது.