குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவதையொட்டி ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதனால் ஆளும் பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றன. ஆளும் பாஜக கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கடந்த சில தினங்களாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோரிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தப்பட்ட நிலையில் அவர்கள் போட்டியிட மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் சரத்பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா வெளியுறவுத்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் ஆவார். வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி அவர் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
இதையும் படிக்கலாம்: தொடரும் ‘அக்னிபாத்’ போராட்டம் – முப்படை தளபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM