மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கிய அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சராக உள்ள சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்று விட்டார்.
அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன், 5 சுயேட்சை எம்எல்ஏக்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், சிவசேனா தலைமை கொறடா பதவியில் இருந்து அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நீக்கி அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து செவ்ரி எம்எல்ஏ அஜய் சவுத்ரி, சிவசேனா கட்சியின் புதிய கொறடாவாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச யாரையும் குஜராத் மாநிலத்திற்கு அனுப்ப மாட்டோம் என்றும், நிலைமை குறித்து கட்சித் தலைமையுடன் விவாதிக்க வேண்டுமானால் அவர் வர வேண்டும் என்றும் சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.