கேரளாவை சேர்ந்த கணவர் கண்முன்னே அவர் மனைவியான பிலிப்பைன்ஸ் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரீஸ்.
இவருக்கு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிலிப்பைன்ஸ் மணிலா பகுதியைச் சேர்ந்த ரைசல் (35) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். 10 நாட்களாக பெங்களூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்த இவர்கள் தற்போது தனது கணவர் வீடான எர்ணாகுளம் செல்வதற்காக பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளனர்.
அப்போது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ரயில் நிலையத்தை கடந்தவுடன் ரைசல் ரயில் படிக்கட்டில் நின்று தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இவரது கணவர் அடுத்து வந்த ஓமலூர் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து இறங்கி மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அவர் சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது காதல் கணவரிடம் விசாரித்து வருகின்றனர்.
ரயிலில் இருந்து விழுந்து இறந்த பெண் வெளி நாட்டைச் சேர்ந்தவர் என்ற நிலையில் தவறி விழுந்தாரா? அல்லது தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டாரா? என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.