றோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரை விடுதலை செய்ய 800 கோடி ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் றோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு மைத்திரி ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
அதுரலி ரதன தேரரின் கோரிக்கை
மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலி ரதன தேரர் அடிக்கடி தம்மிடம் அழைத்து வந்து, இளைஞரை விடுவிக்குமாறு கோரியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
ரதன தேரரும், இளைஞரின் உறவினர்களும் வழங்கிய கோரிக்கை கடிதங்களை தாம் கண்டுகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவ குடும்பம் ஒன்றுக்காக ரதன தேரர் ஏன் அடிக்கடி தம்மை சந்திக்க வந்தார் என்பது தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞரை விடுதலை செய்ய 5 கோடி, 500 கோடி மற்றும் 800 கோடி கையூட்டல் பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தாம் எந்தவொரு தொகை பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் இந்த சம்பவம் குறித்து அப்போது விசாரணை நடத்துமாறு தாம் புலனாய்வு பிரிவிற்கு தாம் பணிப்புரை விடுத்ததாகவும், அதன் போது இளைஞரின் குடும்பம் பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளமை அம்பலமானது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார்.
எனினும், தாம் அதிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.